Ecotourism in Tamil சூழல்சார் சுற்றுலாத்துறை
உலகளவில் நிலைபேண் அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் ஓர் துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. இதனால் உலகப் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிக முக்கியமான அங்கமாக விளங்குகின்றது. இன்று சுற்றுலாத்துறை பல வேலைவாய்ப்புக்களையும், பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான வருவாயையும் நாடுகளுக்குப் பெற்றுக் கொடுக்கின்றது.
அதுமட்டுமன்றி அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பிரதானமான அபிவிருத்தி அங்கமாகவும் சுற்றுலாத்துறை அமைகின்றது. நாட்டின் தரைத்தோற்றம், இயற்கை அமைவிடம், பௌதீக, உயிரியல், சூழலியல் விடயங்கள், காலநிலை, தனித்துவம் மிக்க இயற்கை அம்சங்கள், கலாசார மையங்கள் மற்றும் விசேடமான நிகழ்வுகள், விளையாட்டுகள் போன்றன சுற்றுலாப் பயணிகளை கவரும் விடயங்களாகக் காணப்படுகின்றன.
சுற்றுலாத்துறை பொருளாதாரம், புவியியல், சூழலியல் போன்ற துறைகளோடு தொடர்பினைக் கொண்டிருப்பதைப் போன்று சமூகவியலுடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. இத்தகைய தொடர்பே ஜேர்மனியில் ‘சுற்றுலாத்துறை சமூகவியல்’ (Sociology of Tourism) தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது.
புலம்பெயர்வு, சுற்றுலாத்துறை ஏற்படுத்தும் சமூகப் பொருளாதார மாற்றங்கள், சூழற் பாதுகாப்பு, சுற்றுலாத்துறை வகைகள், சுற்றுலாத்துறை முறைமை போன்ற விடயங்களைப் பற்றி சுற்றுலாத்துறை சமூகவியல் பருநிலையான பார்வையைச் செலுத்துகின்றது.
சுற்றுலாத்துறையானது வளர்ச்சியடைந்த நாடுகளினதும் (Developed country) வளர்முக நாடுகளினதும் (Developing Country) வளர்ச்சிக்கு பெருமளவு உள்ளார்ந்த ஆற்றலை கொண்டிருக்கும் ஒரு துறையாக இருந்து வருகின்றது. அது அந்நிய செலாவணியைச் (Foreign income) சம்பாதிப்பதன் மூலமும் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலமும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து வருகின்றது.
சுற்றுலா என்பது மக்கள் தமது சாதாரண வேலையிடங்களிலிருந்தும் இருப்பிடங்களிலிருந்தும், வேறு இடங்களிற்கு தற்காலிகமாக நகர்ந்து செல்வதாகும் – மத்தீநன் மற்றும், வோல் (1982) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச சுற்றுலாத்துறை (International Tourism) என்பது வளர்முக நாடுகளில் பெருமளவு வாய்ப்புக்களைக் கொண்டதும் சிக்கலானதும் மிக குறைந்த அளவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுமான ஒரு கைத்தொழிலாக இருந்து வருவதாக லூவிஸ்டர்னர் (1976) கூறுகிறார்.
இந்த வகையில் சுற்றுலாத்துறை உலகில் மிகப் பெரிய கைத்தொழிலாக பரவலாக கருதப்பட்டு வருகின்றது. சுற்றுலாத்துறை இன்று பொருளாதார முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் கணிசமான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களின் போது பெரும்பாலான வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் மிக வேகமாக வளர்ச்சி கண்டுவரும் பொருளாதார துறையாக அது இருந்து வந்துள்ளது. எனவே சேவைப் பொருளாதாரத்தின் ஒரு மிகப்பெரிய கூறாக இது உருவாகி வந்துள்ளது.
சர்வதேச சுற்றுலாத்துறையிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் பெரும்பாலான நாடுகளை பொறுத்த வரையில் பெறுமதி மிக்க ஒரு வருமான மார்க்கத்தை வழங்க முடியும். பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகளும், அவர்கள் செலவு செய்யும் தொகைகளும் சுற்றுலாப்பயணிகள் சென்றடையும் நாடுகளின் வருமானம், வேலைவாய்ப்பு, அரசாங்க வருவாய், சென்மதி நிலுவை, கலாசாரம் என்பவற்றின் மீது கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அரசாங்கங்கள் தமது தேசிய பொருளாதாரங்களை வளர்த்தெடுப்பதற்கும், அந்நிய செலவாணி நிலையை விருத்திசெய்து கொள்வதற்கும் என சர்வதேச சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சுற்றுலாத்துறையில் ஏற்படும் பெருக்கத்தின் விளைவாக வேலைவாய்ப்புக்கள், வருமானங்கள், வெளியீடு என்பவற்றில் அதிகரிப்பு ஏற்படுவதுடன் பணவீக்கமும் உயர்ந்து செல்ல முடியும். எனவே சுற்றுலாத்துறைக்கான கேள்வி தனிநபர்கள் குடும்பங்கள், தனியார் வர்த்தகங்கள் மற்றும் பொதுத்துறை போன்ற பொருளாதாரத்தில் அனைத்து துறைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
நாட்டுக்குள் வந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அவர்கள் செலவு செய்த இரவுகளின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் இங்கு தங்கியிருந்த காலம் அளவு என்பவற்றினை கொண்டு சுற்றுலாத்துறையின் பரிமாணத்தை மதிப்பிட முடியும்.
வரைவிலக்கணங்கள்
சுற்றுலாத்துறையில் 1970 களைத் தொடர்ந்து சூழலியலில் சுற்றுலா முக்கியம் பெற்று வருகின்றது. சூழலியல் சார் சுற்றுலாவினை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகபள் சபை 2002 ம் ஆண்டினை சர்வதேச சூழலியல் சுற்றுலா ஆண்டாக பிரகடனப்படுத்தியிருந்தது.
இச் சூழல் சார் சுற்றுலா முதன்முதல் 1950களில் ஆபிரிக்காக் கண்டத்தில் அறிமுகப்படுத்தபட்டதாக கமூரா (Kamrao-2007) எனும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
சூழலியல் சுற்றுலா தொடர்பாக பல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதெனினும் அது தொடர்பான தெளிவான வரையறைகளை மேற்கொள்வது சிரமமானதாகும்.
சூழல்சார் சுற்றுலாக் கழகத்தின்-Ecoclub (1990) வரைவிலக்கணத்தின் படி உள்ளுர் மக்களிடமிருந்து இயற்கைப் பிரதேசங்களுக்கு பதிலளிக்கக்கூடிய வகையில் மேற்கொள்ளப்படுகின்ற பயணம் சூழல்சார் சுற்றுலா எனப்படும். இதனால் இப்பிரதேசம் பாதுகாக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.
இயற்கைப் பாதுகாப்புச் சபையானது உலகப் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து சூழல்சார் சுற்றுலா என்பதற்குப் பின்வருமாறு வரைவிலக்கணத்தினை முன்வைத்துள்ளது. ‘இயற்கை பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்ளல் என்பதனை சூழலியல் ரீதியாக உரிமைப்படுத்துவதுடன், இயற்கையை மகிழ்வாக இரசிப்பதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் உதவுவதோடு கடந்தகால, நிகழ்கால கலாசாரத்தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் வழி வகுக்கின்றது.
ஹெக்ரெர் சிபாலஸ் லஷகூரியன் (Hector ceballos Lascurain 1983) சூழல்சார் சுற்றுலா என்பதனை ‘ஒரு இயற்கை தழுவிய பிரயாணமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இது குழப்பமடைந்த அல்லது பாதிப்பபடைந்த பிரதேசங்களுடனும் தொடர்புபட்டதெனவும், இது உரிமை கோரும் சுற்றுலா எனவும் வரையறுக்கின்றார்.
இச் சுற்றுலாத்துறையானது பிரதேச மக்களின் சமூக, பொருளாதார அபிவிருத்தி- Socio-Ecomic development மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்ற துறையாகக் காணப்படுகின்றது. மிக முக்கியமாக வேலைவாய்ப்புக்களை வழங்குவதன் ஊடாக அம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகின்றது
1.சூழலியல் சார் சுற்றுலாவின் நோக்கங்கள் -Aim of Ecotourism
2.இயற்கையையும் சமூக கலாசாரத்தையும் (Protect Natural and social culture) 3.பாதுகாத்தல் என்ற விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்துதல்
உயிர் பல்லினத்தன்மையை பாதுகாத்தலும் அதன் நிலைத்திருக்கும் தன்மையை உறுதிப்படுத்துதலும். (Bio Diversity)
4.உள்ளுர் பகுதிகளுக்கு பொருளாதார ரீதியான வருவாயை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் நிறுவன ரீதியான அதிகாரத்துடன் இயற்கைப் பிரதேசங்களைப் பாதுகாத்தல். (Economic Growth)
5.இனங்காணப்பட்ட சூழல் பிரதேசங்களின் முகாமையினூடாக சுற்றுலாவின் பெறுமதியினை அதிகரித்தல். (Environment Management)
6.மக்கள் சந்தோசமாகவும் சுதந்திரமாகவும் இருப்பதற்கு இயற்கையைப் பயன்படுத்திக் கொள்ளல். (Freedom and Happiness)
7.செல்வச் செழிப்புக் காரணமாக ஏற்படும் விரயத்தினை தவிர்த்தல். ஆகிய நோக்கங்களைக் கொண்டு செயற்படுகின்றது.
சூழலியல் சார் சுற்றுலாவின் பண்புகள்
இச்சுற்றுலாப் பயணிகளின் முக்கிய எண்ணமாக இருப்பது இயற்கையை அவதானிப்பதும் அவற்றை ஏற்றுக் கொள்வதுமாகும். (Observation)
சூழல் கல்விசார் அம்சங்களை விபரிக்கும் தன்மைகளை உள்ளடக்கியது.(Ecotourism Education)
சமூக, கலாசாரச் சூழலிலும் இயற்கையிலும் இது குறைந்தளவான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றது.
சூழல்சார் சுற்றுலாவில் ஈடுபடுபவர்கள் ஒரு சிறு குழுவினராக இருப்பர்.
புவியின் பல பின்தங்கிய பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தமது பயணத்தை மேற்கொள்வர்.
இச் சுற்றலாவில் ஈடுபடும் பயணிகளின் சிறு தவறு கூட சூழலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இயற்கை ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது அனுபவங்களைத் தரவல்லது. இவ் அனுபவத்தை மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தக் கட்டடத்தாலும் தர முடியாது.
kidhours – Ecotourism in Tamil , Ecotourism in Tamil essay , Ecotourism in Tamil Geography
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.