நியாயமும் சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் கடைபிடிக்கப்படும் இயேசு உயிர்தெழுதல் குறித்த சிறப்பு செய்தி..
கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 29 ஆம் நூற்றாண்டிலிருந்து உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு கூறுகிறது. மரணத்திலிருந்து இயேசு கிறிஸ்து விடுதலை பெற்று உயிர்த்தெழுந்த நிகழ்வை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற கிறிஸ்தவச் சபைகளிலும் பாஸ்கா திருவிழிப்பு என்ற பெயரில் நினைவு கூறும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலை அல்லது இரவில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கல்வாரி மலையில் சொல்ல முடியாத அளவு துயரத்தில் முள் கிரீடம் சூட்டப்பட்டு சித்திரவதைக்குள்ளான போதும் தனக்கு தண்டனை அளித்தவர்களை மன்னிக்க வேண்டி இறைவனிடம் மன்றாடினார்.
“இறைவா இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும்” என வேண்டிக் கொண்டார். இந்த இறை குணம் மனிதனுக்கும் வர வேண்டும் என்பது அவரின் எண்ணம். ஆனால் எந்த குற்றமும் செய்யாத நிலையிலும் இயேசு பிரானை சிலுவையில் அறைந்தனர். சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த ஏசுபிரான் அன்றிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அந்நாள் ஈஸ்டர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் தினமான நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்த்தெழுந்தார் என்று மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கின்றனர். ஈஸ்டர் பண்டிகை ஒரு வசந்த கால தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் ஈஸ்டர் மணிகள் என்ற மலர்கள் பல நிறங்களில் பூத்துக்குலுங்கி மகிழ்விக்கும். இந்த பண்டிகையின் முக்கிய அம்சம் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள்.
பண்டைய காலங்களில் வர்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கு சாக்லேட் போன்ற உண்ணக்கூடிய பொருட்களால் ஈஸ்டர் முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படுகிறது. அதிக முட்டைகளை கண்டறியும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
வசந்தகாலத்தில் மீண்டும் பிறப்பதை முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது. முட்டையானது புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. முட்டை அடைக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புதிய வாழ்வின் குறியீடாக கருதப்படுகிறது. மிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் முட்டை என்பது விரதத்தை முடிக்கும் கொண்டாட்டம் மட்டுமன்றி இயேசு மீண்டும் பிறப்பதற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.
பாரம்பரியமாக ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு வருகிறது. அது இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது. அதனுடைய கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும் அதனை உடைப்பது மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது. சிலுவையில் அறையப்பட்டு மரணித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த வரவிற்காக கொண்டாடப்படும் பண்டிகை ஈஸ்டர் திருநாளில் அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்குகிறது.
அஞ்ஞானத்தில் இருந்து விடுதலை பெற்று ஆன்மீகத்தை உணர்த்திய சாகாவரம் இந்த ஈஸ்டர் பண்டிகையாகும். கிறிஸ்தவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் வாழ்வின் மறைப்பொருளை உணர்த்தும் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.