உயர்ந்துவரும் பணவீக்கம் உலகளவில் வாழ்க்கைச் செலவுகளை உயர்த்தியுள்ள நிலையில், உலகின் வாழ்வதற்கு அதிக செலவு கொண்ட நகராக இஸ்ரேலின் டெல் அவிவ் முதலிடத்தை பிடித்துள்ளது.
தி எகொனமிஸ்ட் சஞ்சிகையின் பொருளாதார புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந்த இஸ்ரேலிய நகரம் ஐந்து இடங்கள் முன்னேறி முதல் முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளாவிய வாழ்க்கைச் செலவு குறியீடு, 173 நகரங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்க டொலரில் விலை ஒப்பிடப்பட்டு தொகுக்கப்படுகிறது.
இஸ்ரேலிய நாணயமான சேக்கல் அமெரிக்க டொலருக்கு எதிராக வலுப்பெற்றது.
அதேபோன்று போக்குவரத்து மற்றும் மளிகை பொருட்களின் விலை அதிகரிப்பு டெல் அவிவ் நகர் வேகமாக முன்னிலைக்கு வருவதற்கு காரணமாகியுள்ளது. பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தை பகிர்வதோடு அதனை அடுத்து சூரிவ் மற்றும் ஹொங்கொங் காணப்படுகின்றன. நியூயோர்க் ஆறாவது இடத்திலும் ஜெனீவா ஏழாவது இடத்திலும் உள்ளன.
உலகில் மிகக் குறைந்த செலவு கொண்ட நகராக சிரிய தலைநகர் டமஸ்கஸ் பதிவாகியுள்ளது.