வங்காள விரிகுடாவில் உருவான புல்புல் புயல் வங்காளதேசத்தில் மிகவும் கடுமையான சேதங்களை உருவாக்கியுள்ளது. இரண்டு பேர் புயலுக்கு பலியானார்கள். 21 லட்சம் பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து மேடான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். 13 லட்சம் பேர் 5000 புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை காலை புல்புல் புயல் வங்காள விரிகுடா கடலில் உருவானது. வெள்ளிக்கிழமை பிற்பகலிலும் சனிக்கிழமையும் மிகவும் கடுமையான புயலாக அது வலுப்பெற்றது. சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணிக்குள் கரையை கடந்து வங்காளதேசத்தை அல்லது இந்தியாவின் மேற்கு வங்காளத்தை தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
நேற்று பௌர்ணமி என்கிற காரணத்தினால் கடலில் நீர் பெருக்கம் இருக்கும் அதனால் தாழ்வான பகுதிகள் மிக எளிதாக புயலில் மூழ்கடிக்கப் படும் என்று அச்சம் நிலவியது. ஆனால் புயல் நேற்று இரவு கரை கிடைக்கவில்லை .ஞாயிற்றுக்கிழமை காலை கடல்நீர் உள்வாங்கத் தொடங்கிய சமயத்தில் கரையேறியது. அதனால் கடல் நீர் பெருக்கினால் பெரும் சேதம் இல்லாமல் தவிர்க்க முடிந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயலுக்கு முன்னேற்பாடாக பல நடவடிக்கைகளை பங்காளதேஷ் அரசு மேற்கொண்டது.வங்கதேச அரசு ஊழியர் விடுப்பு இருந்தால் அவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் சனிக்கிழமை பிற்பகலில் இருந்து வங்காளதேச நதிக்கரைகளில் படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
வங்காளதேச கடல் பகுதிகளிலும் படகு போக்குவரத்தை அரசு அதிகாரிகள் தடை செய்தனர்.
மேலும் வங்காள தேச துறைமுகங்களில் ஏற்றுமதி-இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. வங்காளதேசத்தில் இருந்து 80 சதவீத ஏற்றுமதி இறக்குமதி சட்டோகிரம் துறைமுகத்தின் வழியாகத்தான் நடைபெறுகிறது. அந்தத் துறைமுகத்தில் எல்லா நடவடிக்கைகளும் சனிக்கிழமை மாலையில் இருந்து நிறுத்தப்பட்டுவிட்டன. அதனால் துறைமுகங்கள், நதிகள், கடலோரப் பகுதிகளில் படகில் செல்வோர் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லாமல் தடுக்கப்பட்டது.
14 லட்சம் பேர் அரசு அமைத்த 5000 புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சமாக உயர்ந்தது. அதனால் 120 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று காலை புயல் காற்று வீசிய போதிலும் பெரும் பாதிப்பு ஏதும் இல்லாமல் தடுக்க முடிந்தது.
வங்காளதேச அரசு அதிகாரிகள் நாங்கள் அஞ்சியதைவிட பாதிப்பு இந்த முறை குறைவாகவே இருந்தது. இது மக்களின் அதிர்ஷ்டம் என்று தெரிவித்தனர்.
வங்காளதேசத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பத்துகாலி என்ற கிராமத்தில் மரம் ஒன்று அருகில் இருந்த வீட்டின் மீது புயல் காற்றினால் சாய்ந்து விழுந்தது. வீட்டிற்குள் இருந்த 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதே போன்ற சம்பவம் குல்னா என்ற இடத்திலும் ஏற்பட்டது அங்கும் வீட்டின் மீது மரம் விழுந்ததால் ஒரு வயதான முதியவர் உயிரிழந்தார்.
புல்புல் புயலின் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்தில் இருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புல்புல் புயல் மேற்குவங்காளத்திற்கும் பங்களா தேஷ் தென்மேற்கு பகுதிக்கும் இடையே கரையேறியது. இப்பொழுது புல்புல் புயல் வலுவிழந்து விட்டது என வங்காளதேச அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.