ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில் அணை ஒன்று உடைந்ததில் வெள்ளத்தில் மூழ்கி 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காணவில்லை. அந்த அணை பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சைபீரியாவில் கிராஸ்னோயார்ஸ்க் பகுதியில் உள்ள செய்பா ஆற்றில் இந்த அணை 3 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டது. ஆனால் இப்படி ஒரு இந்த அணை கட்டப்பட்டது தொடர்பாக தங்களுக்கு எந்த விவரமும் தெரியாது என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சைபா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று காலை 6 மணியளவில் அந்த அணை உடைந்து அருகே இருந்த சுரங்க தொழிலாளர்களின் வசிப்பிடத்தில் வெள்ளம் புகுந்தது. இங்கு சுமார் 80 தொழிலாளர்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
தொழிலாளர்கள் உறங்கி கொண்டிருந்த போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் 15 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 13 பேரின் நிலை குறித்து தெரியவில்லை.
வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பிராந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே மருத்துவ குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 300 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 6 ஹெலிகாப்டர்கள், 6 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
காடுகள், மலைகள் சூழ்ந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணியை தொடர்ந்து மேற்கொள்வது பெரும் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கும்படி ஆணையிட்டுள்ளார் என அரசு செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.