ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து நாளை(ஏப்ரல் 23) மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும் என இங்கிலாந்து சுகாதாரத் துறை செயலர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேரை பலி கொண்டுள்ளது. இன்றைய தேதியில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் உற்சாகம் தரும் செய்தியை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தின் சுகாதாரத் துறை செயலர் மட் ஹான்காக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, புதிய நோயான கொரோனா வைரஸை நீண்ட கால நோக்கில் தோற்கடிப்பதற்கு சிறந்த வழி தடுப்பு மருந்து மட்டுமே. தடுப்பு மருந்து கண்டறியும் உலகளாவிய முயற்சியில் இங்கிலாந்து முன்னணியில் உள்ளது. தடுப்பூசிக்கான உலகளாவிய தேடலில் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான பணத்தை இங்கிலாந்து அளித்திருக்கிறது. ஆக்ஸ்போர்டு மற்றும் இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் தடுப்பு மருந்து உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு நம்பிக்கைக்குரிய திட்டங்களும் விரைவான முன்னேற்றத்தை அடைந்து வருகின்றன.
இம்பீரியல் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் கட்ட மருத்துவ சோதனைகளுக்காக 22.5 மில்லியன் பவுண்ட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் குழுவினரின் ஆராய்ச்சிக்காக 20 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டின் புத்திசாலித்தனமான குழு, பரிசோதனைகளை விரைவுப்படுத்தியுள்ளனர். அதன் முடிவாக வரும் வியாழன் முதல் (ஏப்ரல் 23), ஆக்ஸ்போர்டு குழுவினரது தடுப்பு மருந்து மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும். கொரோனா வைரஸ் ஒரு சக்திவாய்ந்த எதிரி. ஆனால் மனித அறிவின் சக்தி அதை விட வலுவானது என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் அறிவியல் மேம்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.