உடலுக்கு கேடு என்று நமக்கெல்லாம் தெரிந்திருந்தாலும் நம் குழந்தைகளுக்கு கவர்ச்சிகரமாக தொங்கும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்களை வாங்கிக் கொடுப்பதை நாமும் நிறுத்துவதாக இல்லை. அதற்கு பதிலாக கடலை மிட்டாய், எள்ளு உருண்டை ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தால் நல்லது. ஆனாலும் நாம் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்களைக் கொடுக்கிறோம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இந்த பாக்கெட்டில் நான்கே நான்கு சிப்ஸை வைத்துக்கொண்டு காற்றை மட்டுமே நிரப்பி பலூன் போல் ஊதிவைத்திருப்பதையும் பார்க்கிறோம். அதைப் பார்ப்பவர்கள் இதை நினைத்து திட்டுவதையும் கேட்கிறோம். அதிலும் முகமே தெரியாத அந்த கம்பெனிக்காரனை திட்டுவதை நாம் ஒவ்வொருமுறையும் தொடர்கிறோம். ஆனால் அப்படி ஏன் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?
நாம் பாக்கெட்டைத் திறந்ததும் புஷ் என காற்று போகிறதே…ஏன் சிப்ஸில் காற்று அடைக்கிறார்கள் தெரியுமா? ‘சிப்ஸ் பொதுவாகவே நொருங்கும் தன்மைக் கொண்டது. பாக்கெட்டில் காற்றை நிரப்பாமல் பேக் செய்தால் அது நொருங்கிவிடும். இதே காற்று நிரப்பப்பட்டால் ஒன்றின் மீது ஒன்று விழுந்தாலும் பெரொய அளவில் அழுத்தம் வராது. சிப்ஸ்ம் தயாரிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
அதேபோல் வெறும் சிப்ஸை அப்படியே பேக் செய்தால் பாக்கெட்டுக்குள் இருக்கும் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து விரைவில் நாசமாகிவிடும். இதனால் பாக்கெட்டில் நைட்ரஜன் வாயுவை நிரப்புவார்கள். இதனால் சிப்ஸ் சீக்கிரம் கெடாது. நைட்ரஜன் வாயுவை நிரப்புவதால் சிப்ஸ் கெட்டுப்போகாது என்பது தெரியாமல் வெறுமனே காற்றை நிரப்பி காசு வாங்குவதாக நாம் எத்தனை முறை திட்டியிருப்போம். ஆக, இனி அப்படி திட்டாதீங்க!