சீனாவின் ஷாவோலின் டெம்பிள் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உலக புகழ் பெற்ற சக்தி வாய்ந்த அபூர்வ கோவில் அது. அங்கு தீவிரமான பயிற்சிகள் மூலம் புத்த துறவிகள் பல சக்திகளை பெற்று வருகின்றனர். திரைப்படங்களில் நாம் இவற்றை பற்றி காணும் போதே நம்மால் இதை செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்? என்று கனவு கண்டு கொண்டிருப்போம். அதிவேகமாக ஓடுவது, ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சர்ரென மின்னல் வேகத்தில் தாவுவது போன்றவற்றை சுலபமாக செய்து விடுகின்றனர்.
இந்த பயிற்சிகள் அனைத்தும் மிகவும் சிரமமானவை என்பதும், இதற்கு நீண்ட கால பயிற்சிகள் தேவைப்படும் என்பதும் நாம் அறிந்த ஒன்றே. அவ்வகையில் மேலும் 10 அபார சக்திகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இப்பதிவில் காணலாம். சீன ஷாவோலின் துறவிகளால் தங்களின் உடல் வெப்ப நிலையை சுற்றுப்புற தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப சமன் செய்ய முடியுமாம். கோடை காலத்தில் உடல் வெப்ப நிலையை அதிகரிக்கவும், குளிர் காலத்தில் அதன் அளவை குறைக்கவும் முடியும். அதிலும் குறிப்பாக அவர்கள் எந்த விதமான கருவி அல்லது பொருளின் துணை இன்றி தங்களின் மனம் மற்றும் உடலை கொண்டே இதை செய்கிறார்கள்.
இதை அவர்களை பரிசோதித்த ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்களால் சாதாரண ஊசியை அதிக விசையை செலுத்தி தூக்கி எரிந்து கண்ணாடியை கூட துளைத்து கொண்டு போகுமாறு செய்ய முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புவதற்கு சிரமமாக தான் இருக்கும். ஆனால் முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளனர். பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களும், தனி நபர் ஆய்வாளர்களும் இந்த சோதனையை பரிசோதித்து சென்றுள்ளனர். அதில் 150km வேகத்தில் துறவி ஒருவர் தன் சக்தியை பயன்படுத்தி ஊசியை தூக்கி எரிந்து கண்ணாடியை துளைத்து கொண்டு போக செய்திருக்கிறார்.
பொதுவாக மனித உடம்பில் விரல்களுக்கு அதிகம் வேலை இருக்கும். இந்த விரல்களுக்கு ஷாவோலின் துறவிகள் அதிக பயிற்சியினை அளித்து வலிமை கூட செய்கின்றனர். அதனால் இவர்களால் தங்களின் விரல்களை கொண்டு பல வியக்கத்தக்க விஷயங்களை செய்ய முடிகிறது. இந்த துறவிகளால் தங்களின் முழு உடம்பையும் ஒரே ஒரு விரலை கொண்டு தாங்க செய்ய முடியும். சிரசாசனம் செய்து மொத்த உடலையும் தலை கீழாக இரு கைகளால் தாங்க முடிவது போல் இவர்கள் ஒரே ஒரு விரலால் தங்கள் முழு உடலையும் தாங்கும் சக்தி கொண்டுள்ளனர்.
இதற்கு கடுமையான பயிற்சி தேவை. மனிதனுக்கு உடலின் மிகவும் ஆபத்தான பகுதியாக இருப்பது கால்களுக்கு இடைப்பட்ட பகுதி தான். இந்த பயிற்சி மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதால் சிலர் மட்டும் இதனை மேற்கொள்கின்றனர். இதில் கால்களுக்கு இடைப்பட்ட பகுதியை எவ்வளவு வேகமாக தாக்கினாலும் அவர்களுக்கு ஒன்றும் ஆகாது. இதற்காக பல கட்ட பயிற்சிகள் முறையாக கொடுக்கப்படுகின்றன. எதிரிகளிடன் இருந்து தங்களை காக்க இந்த பயிற்சி முறை பெரிதும் துணை செய்வதாக கூறுகின்றனர். அதே போல் தலையின் மண்டை ஓட்டு பகுதியை பட்டு துணியில் மோதுவதில் ஆரம்பித்து, மரத்தில் மோதுவது வரை சிறிது சிறிதாக கடுமையாக பயிற்சிகள் செய்து மண்டையோட்டை மிகவும் வலிமையாக மாற்றுகின்றனர்.
இந்த பயிற்சியை முடித்தவர்கள் செங்கல், கட்டை, சுவர் என்று எதிலும் தங்கள் தலையை பயன்படுத்தி உடைக்கச் செய்ய முடியும். ஷாவோலின் பயிற்சிகளில் வயிற்று பகுதியை வலிமையாக்கும் பயிற்சியையும் மேற்கொள்கின்றனர். அதற்காக முதல் கட்டமாக வயிற்றில் ஊசிகள் மூலம் கீறல்களை உண்டாக்குவர். பின்னர் எப்போதும் அவர்களின் வயிற்றை வேறொரு நபரால் குத்துவதும், கல்லை வயிற்றில் வைத்து சுத்தியலால் உடைப்பதும் செய்து வலிமை பெற செய்வர். பல கட்ட பயிற்சிகளுக்கு பிறகு அவர்களின் வயிற்றில் எந்த விதமான தாக்குதல்களையும் தாங்கும் சக்தி ஏற்படுகிறது. குங்ஃபூ பயிற்சியில் முக்கிய பயிற்சியாக இந்த பயிற்சி இடம் பெற்றிருக்கிறது.
வியப்பின் உச்சமாக ஷாவோலின் பயிற்சி துறவி ஒருவர் தண்ணீரின் மீது நடந்து காட்டியுள்ளார். இதனை உலக சாதனையாக பதிவும் செய்துள்ளனர். நாம் படங்களிலும், புத்தகத்திலும் தான் இந்த நிகழ்வை பார்த்திருப்போம். ஆனால் ஷாவோலின் துறவி அதனை செய்து காட்டியுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. இதில் அவர் வெறும் தண்ணீரின் மேல் நடக்கவில்லை. நீரில் மெல்லிய மரப்பாலம் ஒன்று வைத்திருந்தனர். எனினும் 50 வினாடிக்குள் சுமார் 120 மீட்டர் தூரம் தண்ணீரின் மீது வேகமாக நடப்பது சாதனை தான். இதற்காக அவர் 9 ஆண்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணல் நிரம்பிய பாத்திரத்திற்குள் விரல்களை வேகமாக குத்தி குத்தி எடுப்பதன் மூலமும், மேலும் கனமான இரு உருளைகளுக்கு நடுவில் கைகளை செலுத்தி மீண்டும் வெளியே எடுப்பதன் மூலமும் பயிற்சிகள் செய்து விரல்கள் வலிமை அடைய செய்கின்றனர். இந்த பயிற்சிக்கு பின் விரல்கள் மிகுந்த சக்தி பெற்று அதிக எடை தூக்குவது, பாறைகளை விரல்களாலேயே துளைப்பது போன்ற செயல்களை செய்கின்றனர். இத்தனையும் மேலாக மிகவும் ஆச்சரியமான ஒரு சக்தி என்றால் அது கொதிக்கும் எண்ணையில் தியானம் செய்வது தான்.
கேட்பதற்கு கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ள நரக தண்டனை போல் இருக்கிறது அல்லவா? ஆனால் உண்மையில் ஷாவோலின் கோவில் துறவிகளில் முக்கியமான சிலர் குறிப்பிட்ட விழாக்களின் போது மூலிகைகள் கொண்ட மிகப்பெரிய பாத்திரத்தில் எண்ணையை கொதிக்க விடுகின்றனர். அதில் ஷாவோலின் துறவி ஒருவர் தியானம் செய்வார். பின்னர் அந்த எண்ணெயை மக்கள் புனிதமாக கருதி வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.
இந்த சக்திகள் யாவும் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. கடுமையான மற்றும் நீண்ட கால தொடர் பயிற்சிகளின் மூலமாக ஷாவோலின் கோவில் துறவிகள் பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்களின் மனோதிடம், உடல் வலிமை மேம்படுவதை உலக மக்களால் வியக்கதக்க வகையில் பார்க்கப்படுகிறது. இதனால் எந்த சாதனைக்கும் விடா முயற்சி ஒன்றே தேவை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.