கொரோனா காலத்தில் ஏற்பட்ட லாக்டவுன், வாகனங்களைப் பயன்படுத்தாமை போன்ற பல்வேறு காரணங்களால் ஓசோன் படலத்தில் இருந்த ஓட்டை அடைபட்டுள்ளது. பல நதிகள் சுத்தமாகியுள்ளன. காற்று மாசுபாடு குறைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் உலகின் பல கடற்கரைகள் கூட தூய்மையாகக் காட்சியளிக்கின்றன. லாக்டவுனால் இதுபோன்ற பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. தவிர, ஆயிரக்கணக்கான பறவைகளும் விலங்குகளும் மக்கள் நடமாடிய இடங்களுக்கு வந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளன.
ஆனால், இந்த ஆச்சர்யம் நிலைக்கப்போவதில்லை. ஆம்; 2070-இல் சுமார் 300 கோடிப்பேர் கடுமையான வெப்பச் சூழலில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர். இந்த வெப்பத்தால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து பல இன்னல்களை மனித சமூகம் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.