அகில உலக யோகா சம்மேளனம் நடாத்திய, யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று யாழ் யோகா உலகம் சாதனை படைத்துள்ளது.
அகில உலக யோகா சம்மேளனம், அகில உலக யோகா வெற்றியாளர் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான போட்டி கடந்த மாத இறுதிப் பகுதியில் இணைய வழியில் நடத்தியிருந்தது.
இப்போட்டியில் யாழ் யோகா உலகம் அமைப்பு சார்பாக கணேசமூர்த்தி ராஜ்குமார் வெவ்வேறு இரு யோகா போட்டிகளில், போட்டியிட்டு முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.
18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் வளையுந்தன்மையுடைய ஆசன பிரிவிலும் (Flexibility yoga) விசேட ஆசன பிரிவிலுமே (Advanced yoga) இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் நிறுவுநரும் யோகா போதனாசிரியருமாகிய எஸ். உமாசுதன் போட்டியில் வெற்றியீட்டும் வகையில் சாதனையாளனுக்கு யோகா பயிற்சிகள் நுணுக்கமாக வழங்கப்பட்டதோடு நுட்பங்களும் பயிற்றுவிக்கப்பட்டன.
யோகா வகுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் பிரத்தியேகமான இடமொன்றில் இவருக்கென தனியான யோகா பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவை தளமாகக்கொண்டியங்கும் யோகா சம்மேளனத்தின் யோகா வெற்றியாளர் நிகழ்வில் இலங்கை இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் பங்குபற்றியிருந்தன. இதன் முடிவுகள் மே மாதம் 8 ஆம் திகதி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.