Tamil Kids General Knowledge பொது அறிவு – உளச்சார்பு
உலகின் மிக பெரிய தொங்கும் கண்ணாடி பாலம் என்ற பெருமையை வியட்நாமைச் சேர்ந்த பாக் லாங் பாலம் பெற்றுள்ளது. கின்னஸ் உலக சாதனை அமைப்பு இந்த அங்கீகாரத்தை இந்த வியட்நாம் பாலத்திற்கு வழங்கியுள்ளது.
தரையில் இருந்து 492 அடியில் தொங்கும் இந்த பாலத்தின் நீளமானது 2,073 அடியாகும். வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோய்க்கு வடமேற்கு பகுதியில் உள்ள சோன் லா பிராந்தியத்தில் இந்த தொங்கும் பாலம் அமைந்துள்ளது. வியட்நாம் அரசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து இந்த பிரம்மாண்ட கண்ணாடி பாலத்தை கட்டியுள்ளது.
அண்மையில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த பாலமானது சில வாரங்களுக்கு முன்னர் தான் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 450 பேரை சுமக்கும் திறன் கொண்ட இந்த பாலத்தின் மீது SUV வாகனம் ஓட்டி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த பாலம் 40 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட கண்ணாடிகளால் கட்டப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலைத் தொடர்களுக்கு மத்தியில் இந்த அழகான பாலத்தை பொறியியல் விந்தை மூலம் கட்டமைத்துள்ளதாக கின்னஸ் அமைப்பின் பிரதிநிதி கிலென் போலார்டு வியந்து பாராட்டியுள்ளார்.
இந்த பாக் லாங் பாலத்தின் கட்டுமானம் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் பாலத்தின் முழு கட்டுமானம் முடிக்கப்பட்டு கடந்த மாதம் பார்வையாளர்கள் அனுமதிக்கு விடப்பட்டது.
இந்த பாலத்தில் பயணம் செய்ய ஒரு நபருக்கான கட்டணம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,850 ஆகும்.இதற்கு முன் சீனாவைச் சேர்ந்த குவாங்டாங் பகுதியில் உள்ள 526 மீட்டர் கண்ணாடி பாலம் தான் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற பெருமையை கொண்டிருந்தது. இந்த புதிய பாலம் தற்போது சீனா பாலத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
kidhours – Tamil Kids General Knowledge
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை