Essay Baradhiyaar பாரதியார் விடுதலை கட்டுரை
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர்.
தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்
செந்தமிழ்ப் பாவலன் பாரதி, இருளடைந்த இந்தியத் திருநாட்டிற்கு ஒளியாக 20-ஆம் நூற்றாண்டில் உதித்தார். தாம் வாழும் சூழ்நிலையில் நாட்டின் அவல நிலை கண்டு கொதித்தெழுந்தார். ஆகவே வீரசுதந்திரம் வேண்டி எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமை, இனிமை, புதுமை நிறைந்த பாக்களை இயற்றினார். அத்தகு விடுதலை உணர்வை இக்கட்டுரையில் காண்போம்.
![கட்டுரை பாரதியின் விடுதலை Essay Baradhiyaar # World Best Tamil Easy Essays 1 Essay Baradhiyaar](https://www.kidhours.com/wp-content/uploads/2022/05/Untitled-design-44-1.jpg)
‘பாரதம்’ என்பதற்கு இலக்கணம் வகுக்கும் பாரதியார் “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதநாடு” என்று பண்ணிசைத்தார்.
பழம் பாரதத்தை “ஞானத்திலே, பரமோனத்திலே, உயர்மானத்திலே, அன்னதானத்திலே உயர்ந்த நாடு” என மொழிந்து பெருமிதம் அடைந்தார்.
ஆனால் அவர் காலத்தில் அடிமைப்பட்டிருந்த பாரதத்தை எண்ணி “நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்” எனக் கூறிக் கண்ணீர் வடிக்கிறார்.
எட்டையபுரத்தான் வாழ்ந்த காலத்தில் பாரதம் தன் பெருமையினை இழந்து தாழ்வுற்றிருந்தது தாழ்வுற்ற பாரதம் தலைநிமிர்ந்திட
“இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே”
என்று விடுதலை வேட்கையை மக்களிடையே உருவாக்கினார்.
பாரதியின் விடுதலை உணர்வு:
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே”
என்று பாடி, மக்களிடையே ஒற்றுமைத் தாகத்தை ஏற்படுத்தினார்.
“தண்ணீர் விட்டா வளர்த்தோம் சருவேசா
கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?”
என்று, சுதந்திரப் பயிரைக் கண்ணீராலும் செந்நீராலும் காக்க வேண்டும் என்கிறார்.
பாரதியாரின் விடுதலைக் கனவு:
“எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்திய மக்கள்.
எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
எனப்பாடி, உயர்வு தாழ்வற்ற சமதர்ம விடுதலை நாட்டை எண்ணிக் கனவு கண்டார்.
பல்வேறு விடுதலை உணர்வு
பாரதி அரசியல் விடுதலையை மட்டுமல்லாமல் மொழி விடுதலை. ஆன்மீக விடுதலை, சமுதாய விடுதலை, பொருளாதார விடுதலை, பெண் விடுதலை ஆகிய அனைத்து விடுதலைகளுக்கும் குரல் கொடுத்த மூத்த பாவலன் ஆவார். நாட்டுப் பற்றோடு, இறைப்பற்றையும், மொழிப்பற்றையும் ஊட்டவே, “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்று அறைகூவல் விடுத்த உணர்வாளர்.
பாட்டுக்கொரு புலவர் பாரதி 20ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற எழில்மிகு பாரதத்தை உருவாக்க எண்ணி, விடுதலை உணர்வை ஊட்டி விடுதலையை ஈட்டித்தந்த மாபெரும் விடுதலைக் கவிஞராவார். அவர் காட்டிய வழியே சென்று நாட்டின் நலிவை நீக்கி, பொலிவைப் பெறுவோமாக! வேற்றுமையை விடுத்து ஒற்றுமையைக் காண்போமாக! நம்மை வளர்க்கும் நற்றமிழைப் பேணி நல்வாழ்வை அடைவோமாக!
kidhours – Essay Baradhiyaar , Essay Baradhiyaar Notes , Essay Baradhiyaar
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.