அன்னை தெரசா…
ஒரு பெண், தன்னுடைய பன்னிரண்டு வயதில் துறவறம் புக முடிவு செய்து, பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, தான் என்று இல்லாது, இந்த உலகத்தையே தன்னுடைய குடும்பமாய் பாவித்து, சக மனிதர்களின் வாழ்க்கை மேம்பட தன்னுடைய இறுதி நாள் வரை ஒரு பெண் போராடிக்கொண்டே இருந்தார் என்றால் அது “அன்னை தெரசா”வை தவிர வேறு யாராக இருக்க முடியும்.
அன்னை தெரேசா தனது சேவையில் பல அவமானங்களையும் சந்தித்தார் , இவற்றையெல்லாம் கடந்தே இவர் பல சேவைகளை செய்துள்ளார் , இவரது வாழ்க்கையில இடம்பெற்ற நிகழ்வில் ஒரு நிகழ்வே இது:
அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”.
அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான்.
இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.பலர் அருவருத்து ஒதுங்கும் போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழு நோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயத்துக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவருடைய Missionaries of Charity அமைப்பு தற்போது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன.
உன்னத அன்னையின் உயிர்மூச்சு 1997ம் ஆண்டு இதே செப்டம்பர் ஐந்தாம் தேதி அவரது 87வது வயதில் நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.
தாம் வாழ்ந்த போது அவரிடமிருந்த சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெபமாலையும் தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரை சாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம் என்று வருணித்தார். அன்பிற்கு அன்னை தெரேசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது.
இவருக்கு கிடைத்த விருதுகள் :
• 1962 – பத்ம ஸ்ரீ விருது
• 1971 – 23வது போப் ஜான் அமைதி விருது
• 1971 – குட் சமரிட்டன் விருது
• 1971 – கென்னடி விருது
• 1972 – சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
• 1973 – டெம் பிள்டன் விருது
• 1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1979 – அமைதிக்கான நோபல் பரிசு
• 1982 – பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது
• 1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை
ஆனாலும் அன்பு மட்டுமே உலகில் நிலையாக இருக்கும் என்பது அன்னை தெரேசாவின் வாழ்க்கையில இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம் .