திருமதி இலங்கை அழகி போட்டியின்போது வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி. சில்வாவின் மகுடம் பறிக்கப்பட்ட விவகாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை, இன்று உலக அளவில் எதிரொலித்தது. இந்த நிலையில், பறிக்கப்பட்ட மகுடம், மீண்டும் புஷ்பிகா டி. சில்வாவுக்கு இன்று வழங்கப்பட்டது.
முன்னதாக, கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப் போட்டி கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா, “திருமதி இலங்கை அழகி” ஆக தேர்வு செய்யப்பட்டார்.
எனினும், உலக அழகி போட்டியில் கிரீடத்தை சுவீகரித்த கரோலின் ஜுரி, புஷ்பிகா டி. சில்வா, திருமதி இலங்கை கிரீடத்தை பெற தகுதியற்றவர் என அதேமேடையில் பகிரங்கமாக அறிவித்தார்.
இதையடுத்து, புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்த கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்ட, கரோலின் ஜுரி, இரண்டாவது வெற்றியாளருக்கு அந்த கிரீடத்தை அணிவித்தார். இந்த சம்பவமானது, கடந்த இரு தினங்களாக பேசுப் பொருளாக மாறியுள்ளது.போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதுடன், அவர் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என அறிவித்தே, புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கரோலின் ஜுரி, கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், கரோலின் ஜுரியின் செயலுக்கு எதிராக, புஷ்பிகா டி சில்வா, கொழும்பு – கறுவாத்தோட்டம் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, 2020ம் ஆண்டு திருமதி உலக அழகியாக தெரியாகியுள்ள கரோலின் ஜுரியின் செயற்பாடு, கவலையை அளிப்பதாக உலக திருமதி அழகி போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிக்கையொன்றின் ஊடாகவே அவர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.இவ்வாறான நிலையில், இலங்கை பிரபலங்கள் இந்த சம்பவம் தொடர்பில் என்ன கூறுகின்றார்கள் என பிபிசி தமிழ் ஆராய்ந்தது.உலக முதலாவது திருமதி அழகுராணியான ரோஸி சேனாநாயக்க, ஊடகங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.உலக திருமதி அழகுராணியொருவர், மேடையில் செயற்பட்ட விதம் தொடர்பில் தான் கவலை அடைவதாக ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகின்றார்.
உலக நிபந்தனைகளுக்கு அமையவே, செயற்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.நடுவர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கரோலின் ஜுரிக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என அவர் தெரிவிக்கின்றார்.
அழகு ராணி போட்டிகளில் தான் கண்ட மிகவும் மோசமான சம்பவம் இதுவென உலக முதலாவது திருமதி அழகுராணியான ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகின்றார்.