சீனாவில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து நோக்கிச் சென்ற எவர் கிவன் கப்பல், கடந்த 23ஆம் தேதியன்று சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்றது. இதனால், அந்த வழியாக செல்ல வேண்டிய 367 கப்பல்கள் செங்கடலிலும், மத்திய தரைக்கடலிலும் வரிசை கட்டி நிற்கின்றன. இக்கப்பல்களில் கச்சா எண்ணெய் முதல் கால்நடைகள் வரை வைக்கப்பட்டுள்ளன.சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து முடங்கியதால், எகிப்து அரசுக்கு நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதோடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து கொண்டே வந்தது. அத்துடன் எவர் கிவன் கப்பலில் இருந்த 24 இந்தியர்க ள் உள்ளிட்ட ஊழியர்களின் நிலையும், வழியில் அணிவகுத்து நிற்கும் கப்பல்களின் ஊழியர்களுக்கான உணவு பிரச்னையும் கவலையை ஏற்படுத்தி வந்தது.
இதையடுத்து, எவர் கிவன் கப்பலில் இருந்த சரக்குகளை இறக்கிவிட்டு, மீட்புப் பணிகளை தொடங்கலாம் என எகிப்து அதிபர் அப்துல் யோசனை தெரிவித்திருந்தார். இந்நிலையில், எவர் கிவன் கப்பல் தரைதட்டிய இடத்தில் 18 மீட்டர் ஆழத்திற்கு 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் தோண்டி எடுக்கப்பட்டதாக, சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை அதிகாலையில் இந்த கப்பல் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், கப்பலை மீட்பதற்காக படகுகள் மற்றும் கப்பல்களுடன் நிபுணர்கள் அழைத்துவரப்பட்டனர். தீவிர முயற்சிகளுக்குப் பிறகு எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டு, நேர்கோட்டில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தனது பயணத்தை தொடங்கியது.
எவர் கிவன் கப்பலை மீட்பதற்காக தீவிரமாக பணியாற்றிய எகிப்தியர்களுக்கு அதிபர் அப்துல் அல்-சிசி நன்றி தெரிவித்துள்ளார். கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு அடுத்த சில நாட்கள் பிடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கடலில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியதையடுத்து கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.