உலகின் மிகவும் குட்டி நாடு. இதன் பெயர் ‘சீலேண்ட்’. இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படித்தால் இன்னும் ஆச்சரியமடைவீர்கள்.
பிரிட்டனின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த (கட்டிடம்) நாடு. இரண்டாம் உலகப் போர் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் தானே? அப்படி அந்தப் போர் தொடங்கியபோது 1942-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கடலில் குட்டித் துறைமுகத்தைக் கட்டியது. கடலில் இரும்பு மற்றும் வலுவான கான்கிரீட்டைப் பயன்படுத்தி இந்தத் துறைமுகத்தைக் கட்டினார்கள். போரில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
போர் முடிந்த பிறகும் 1956-ம் ஆண்டு வரை ‘ரப் டவர்’ எனப் பெயரிட்டு இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தினார்கள். பின்னர் இந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். 1967-ஆம் ஆண்டில் இந்த இடத்துக்கு பேட்டி ராய் பேட்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வந்து தங்கினார். இவர் முன்னாள் ராணுவ அதிகாரியான பேட்ஸ், அங்கு வந்த பிறகு ‘பிரின்ஸிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்’ என்று அந்த இடத்துக்குப் பெயரை வைத்தார். அங்கிருந்து ராய் பேட்ஸை அனுப்ப பிரிட்டன் அதிகாரிகள் முயற்சி செய்தார்கள். ஆனால், அவரை அங்கிருந்து அனுப்ப முடியவில்லை.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால், இந்தத் துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இதன்பிறகு ராய் பேட்ஸ் 1975-ம் ஆண்டில் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார். இந்த நாட்டுக்கென தனியாகக் கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.
கடல் மேலே உள்ள ஒரு குட்டி கட்டிடத்தில்தான் இந்த நாடே இருக்கிறது. ஒரு முறை பேட்ஸூம் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்குப் போனபோது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள். பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளையர்களை விரட்டினார்கள். 1987-ம் வருடத்தில் பிரிட்டன் அரசு கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை அவர்களுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தது.
ஆனாலும் முடியவில்லை. சீலேண்டின் இளவரசராக ராய் பேட்ஸ் செயல்பட்டு நிர்வாகமும் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அப்போது முதல் சீலேண்ட் நாட்டின் இளவரசராகப் பேட்ஸின் மகன் மைக்கேல் இருந்து வருகிறார். தற்போது இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தக் குட்டிக் கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள். நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்துக்கொண்டுதான் வர வேண்டும்.