உலக மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத கருத்துக்களை வள்ளுவப் பெருந்தகை செவ்வனே செப்புகின்றார்.
கடவுள் வாழ்த்து
மலேசியாவில் பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் ஒன்றாகக் கூடி வாழ்ந்து வந்தாலும், அங்கும் நம்முடைய தமிழ்க் கடவுளாக விளங்குகின்ற முருகப்பெருமான் குடிகொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.பல்வேறு மொழிகளையும் கற்றுத் தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருகின்ற மலேசிய மக்களிடத்தில்,
“யாதும் ஊரே! யாவரும் கேளீர்!”
என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றின்படி, நமது தமிழ் மொழியை முதன்மையாகக் கொண்டுள்ள படைப்பாளர் முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்கள் தமது படைப்புகளில் ஒன்றாகிய “அந்திம காலம்” நாவலில் ஆங்கிலத்தை மட்டுமேப் பிரதானமாக கொண்டுள்ள சுந்தரம் என்பவரின் பேரக்குழந்தையாகிய பிரேம் என்பவருக்குத் தமிழ் மொழியின் அவசியத்தையும், தமிழ்ச் சுவையுணர்வினையும் வழங்கி, திருக்குறளின் அறக்கருத்துக்களை எடுத்துக்கூறியது மட்டுமின்றி கற்றுக்கொடுக்கவும் செய்கின்றார்.
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்றும், அதுபோல உலகம் ஆதிகபவன் அவர்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதையும்
“அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” (குறள் -1)
என்னும் வள்ளவரின் கடவுள் வாழ்த்து, குறட்பாவை சொல்லிக் கொடுத்து ஆனந்தப்படுகின்றார். இதன் மூலம் திருக்குறளின் முக்கியத்துவத்தையும், இன்றியமையாமையையும் படைப்பாளர் தன்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகிறது.
அறம் வலியுறுத்தல்
திருக்குறள் வாழ்க்கை மற்றும் அறத்தையே அடிப்படையாகக் கொண்டது.
“அறத்துப்பாலுக்கு அடிப்படை அறமே”
“பொருட்பாலுக்கு அடிப்படை அறமே”
“இன்பத்துப்பாலுக்கு அடிப்படை அறமே”
சுருங்கக் கூறினால் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களும் அறத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.
தொல்காப்பியர் கூறுவது போல,
“சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (தொல். கற்பு – 51)
இவற்றில் சிறந்தது என்பதற்கு. ‘அறம், பொருள், இன்பத்திற்குச் சிறந்தது வீட்டின்பம் என்று நச்சினார்க்கினியர் எடுத்துரைக்கின்றார். தமிழர் மெய்யியலில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அடிப்படை நோக்கங்களில் இன்பம் நோக்கப்படுகிறது.
இவற்றையெல்லாம் முதன்மையாகக் கொண்டு முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்கள் தன்னுடைய படைப்புகளில் குறிப்பாக நாவல்களில் வீட்டின் சூழலுடன் கதைகளை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறாகப் படைத்துள்ள ஒரு நாவலில் ஓய்வு பெற்ற நல்லாசிரியர் சுந்தரம் அவர்கள் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துபராகவும், இன்னும் சற்றுக் கூடுதலாகத் தன்னுடைய மனைவி ஜானகி, செல்லப்பிள்ளையாகிய மகள் மற்றும் அருமை நண்பர் ராமா போன்ற எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துபவராக காட்டப்படுகிறார். ஏனென்றால்,
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது” (குறள் – 45)
என்று திருவள்ளுவர் சொல்லுகின்றார்.
அன்புதான் இல்வாழ்க்கையின் பண்பு, அறம் தான் அதன் பயன், இவையே இல்வாழ்க்கையின் பண்பாகும், பயனும் ஆகும்.இவ்வாறான கருத்துக்களை எல்லாம் முதன்மையாகக் கொண்டு அன்பு பொருந்திய குடும்ப அமைப்புகளையும், சூழல்களையும் எழுத்தாளர் முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்கள் தன்னுடைய “அந்திம காலம்”, “தேடியிருக்கும் தருணங்கள்”, “வானத்தினால் அல்ல”, “ இன்னொரு தடவை” போன்ற படைப்புகளில் அறக்கருத்துகளை முன்னிலைப்படுத்துகின்றார்.
ஒழுக்கத்தின் உயர்வு
எவரொருவர் ஒழுக்கத்துடன் இருக்கின்றாரோ, செயல்படுகின்றாரே அவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு தானாக வந்து சேரும்.
“இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு” (பழமொழி -64)
ஒழுக்கத்தைப் பின்பற்றினால் என்றும் மேன்மை அடைய முடியும்.
நல்ல ஒழுக்கம் உடனே பயன் தராது என்றாலும், பின்னர் விளையப்போகும் நன்மைகளுக்கு வித்திடுவது போன்றதாகும் என்று வள்ளுவர்,
“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி” (குறள் 137)
ஒழுக்கத்தினைக் கடைப்பிடிக்காதவர்கள் சமுதாயத்தில் மதிப்பிழந்து கீழான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று வள்ளுவர் கூறுகின்ற கருத்தினைச் சிந்தையிலே முன் நிறுத்தி முனைவர் ரெ. கார்த்திகேசு படைப்புகளான நாவல்கள், சிறுகதைகள் போன்றவற்றில் ஒழுக்கத்தின் மேன்மையை முன்னிருத்த அவ்வொழுக்கத்துடன் கூடிய கதை மாந்தர்களையும், கதைக் கருத்துகளையும் அமைத்து ஒழுக்கத்தினால் அடைகின்ற மேன்மைகளையும் பட்டியலிட்டுத் தந்திருக்கின்றார்.மேலும், ஒழுக்கமில்லாதவர் அடையும் நிலையையும் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்” (குறள் 136)
கல்விச்சிறப்பு
உழைக்கின்ற மக்களை மட்டுமின்றி, எந்த ஒன்றையும் அதன் இருப்பில், நடப்பில் போக்கில் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் நல்ல கல்வி வேண்டும்.
எண்ணும் எழுத்தும் தான் உயிர் வாழுகின்றவருக்குக் கண் என்று சொல்லுகிறார் வள்ளுவர்.
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” (குறள்: 392)
இப்படிப்பட்டக் கல்வியைக் கல்லாதவர்களைத் திருவள்ளுவர் எப்படிப் பார்க்கிறார்?
“கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்” (குறள் – 393)
என்று முகத்திலிருக்கும் இரண்டு கண்களையும் புண்ணாகப் பார்க்கின்றார்.தெய்வப்புலவர் கூறுவது போல ஒருவர் பெற்ற கல்விச் செல்வம் என்றும் அழியாது, அதனை விட வேறு எந்தச் செல்வமும் செல்வம் ஆகாது, நன்றாகக் கல்வி கற்றவர்கள், அதனால் தாங்கள் மட்டுமின்றி பிறருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்துகின்றனர்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை” (குறள்-400)
எனவேதான் முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்கள் தமது படைப்புகளில் கல்விக்கு மிக முக்கியப் பங்கினை வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு படைப்பிலும் கதை மாந்தர்களின் கல்வி முறைகளைப் பார்த்தோம். ஆனால், தொடக்கக்கல்வி, உயர்நிலைக் கல்வி, உயர்கல்வி, மேலைநாட்டுக் கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகள், பொருளாதார வளர்ச்சி பற்றிக் கல்வி, முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகள், மருத்துவம், பொறியியல் மற்றும் விஞ்ஞானம் என பல்துறைகளில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கின்ற விதமாக ஒவ்வொரு நாவலிலும் கதை மாந்தர்களிடையே கல்வியின் முக்கியத்துவத்தையும், கல்வியைக் கற்பதன் சிறப்பியல்புகளையும் எடுத்துரைக்கும் விதமாகச் சூழல்கள் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
ஒருவர் கல்வி கற்பதன் மூலம், தனக்கு மட்டுமின்றி தன்னைச் சார்ந்துள்ள அனைவருக்கும் இக்காலம் மட்டுமின்றி எக்காலத்திலும் செல்வத்தைக் காட்டிலும் கல்வியே துணையாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் முனைவர் ரெ. கார்த்திகேசு படைப்புகளில் கல்வி கற்பதன் சிறப்புகளைச் சுட்டிக்காட்டுவதை நம்மால் அறிய முடிகிறது.
நட்புணர்வு
நட்புரிமை கொள்வதற்கு அடிக்கடி சந்தித்துப் பழக வேண்டும் என்பதில்லை. ஒரு நாள் கண்டாராயினும் உணர்வுடையார் அவ்வுணர்வுடைமை தானே நட்பாகும் என்பார்.
“கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்குபல கழிய
வழுவின்றிப் பழகிய கிழமையர்” (புறம் : 216:1-3)
இவ்வாறான நட்புணர்ச்சியைத் தன்னுள் கொண்டுள்ள முனைவர் ரெ. கார்த்திகேசு தன்னுடைய “அந்திம காலம்” நாவலில் முக்கியமான கதை மாந்தராக அமைகின்ற சுந்தரம் மற்றும் அவரது உயிர்த் தோழர் ராமா அவர்களின் நட்பின் வெளிப்பாடுகளை மிகுதியாக காணமுடிகின்றது. அதே போல, செவிலியர் மதர்மேகி மற்றும் சுந்தரம் ஆகியோரின் நட்பு, நட்பிற்கே இலக்கணமாக திகழுகின்றது என்று சொன்னால், அது மிகையாகாது.
இவர்களுடைய நட்பு, முகத்தளவிலே காட்டக்கூடிய நட்பு அன்று, மலர்ச்சியோடு உள்ளத்திலே இருந்து வருகின்ற அன்பினால் காட்டக்கூடிய நட்பாக இருக்கின்றன.
“புணர்ச்சி பழுகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்” (குறள் 785)
இவர்களுடைய நட்பிற்குச் சிறந்த அடையாளம் என்று எதைச் சொல்லலாம் என்றால்,
“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு” (குறள் 782)
என்ற குறட்பாவிற்கு ஏற்ப முனைவர் ரெ. கார்த்திகேசுவின் படைப்புகளில் எந்த நிலையிலும் மனம் வேறுபடாமல், தேவைப்படும் போதெல்லாம் உதவி செய்து, நட்பின் மிகுதியால் தாங்க வேண்டும் என்று சொல்லுகின்ற நட்பு அமைந்திருக்கும் விதமாகப் படைப்புகளைத் தந்திருக்கின்றார்.
காதல் சிறப்புரைத்தல்
காதல் சிறப்பை இருவரும் பரிமாறிக் கொள்ளுவதைத்தான் காதற் சிறப்புரைத்தல் என்று திருவள்ளுவர் சொல்லுகிறார்.
நம்முடைய தமிழ் இலக்கியங்களில் தலைவன் தலைவியின் அன்பின் வெளிப்பாடு காதல் பற்றிய செய்திகளை மிகுதியாகக் காணமுடிகிறது.
இவ்வாறாக, காதல் கொண்ட இருமனங்களும் பார்த்துப்பழகிப் பின்னர் ஏதேனும் ஒரு கடமைக்காகப் பிரிந்து இருக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. அப்போது தான் காதலின் உண்மையான அன்பின் வெளிப்பாடு மிகுதியாகின்றது. பார்த்துப் பழகிய கண்கள் பிரிந்த பிறகு உறங்குவதில்லை. உண்மைதான்.
“கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எங் காத லவர்” (குறள் – 1126)
பொதுவாகக் காதலர்களுக்குக் காத்திருப்பது மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். ஏனென்றால் முனைவர் ரெ. கார்த்திகேசுவின் “தேடியிருக்கும் தருணங்கள்” நாவலில் தந்தையின் ஆசைப்படி உயர் ஆய்வுப் படிப்பினைத் தொடர கோலாலம்பூரிலிருந்து இலண்டன் சென்ற சூரியமூர்த்தியின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றாள் அன்புக் காதலி பூங்கொடி.
“ஓர் உயிர் உடலை விட்டுப் பிரிய விரும்பாது”
இது அனைவரும் அறிந்ததே, அதாவது உயிரின்றி உடலில்லை, உடலின்றி உயிரும் இல்லை. இந்த உலகில் இயற்கையுடன் பொருந்தியதுதான் உண்மையான காதல், ஆம்,
“உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு” (குறள் – 1122)
இப்படிப்பட்ட அன்பு, வள்ளுவர் கூறுகின்ற வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றிச் சிறிதும் மாறாமல் அவற்றை ஒழுக்க நெறியுடன் பின்பற்றுவதால் காதல் மலர்ந்து நறுமணம் வீசுகின்றது. என்பதைப் படைப்பாளர் ரெ. கார்த்திகேசு அவர்களின் புதினங்கள் நமக்குக் காதல் சிறப்பினைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
இவ்வாறாக திருவள்ளுவரின் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலில் கூறுகின்ற அறக்கருத்துக்கள் மக்கள் அனைவராலும் ஏற்கத்தக்கன என்பதில் ஐயமில்லை.
இவைகளை மலேசிய எழுத்தாளர்களில் முதன்மையான எழுத்தாளர் என்ற சிறப்பினைப் பெற்ற முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்கள் வள்ளுவர் கூறுகின்ற அறக்கருத்துகளையேத் தனது படைப்புகளில் முன்னிலைப்படுத்துகின்ற பாங்கினை நம்மால் காணமுடிகிறது.
“அறம் எனப் பட்டதே இல்வாழ்க்கை”
முனைவர் ரெ. கார்த்திகேசு