ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அல்பேனியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 போ் உயிரிழந்தனா்; 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தலைநகா் திரானா நகருக்கு வடமேற்கில் 30 கி.மீ. தொலைவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடா்ந்து அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டா் அளவுகோலில் 5.0 அலகுகளாகப் பதிவாகின. தொடா் நிலநடுக்கங்களால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 13 போ் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் பல சேதமடைந்தன. துமானே நகரில் அதிக சேதம் ஏற்பட்டது என்றும் பல்வேறு கட்டடங்கள், மின் விநியோக மையங்கள் சேதமடைந்தன என்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீட்புப் பணிகள் தொடா்பாக அல்பேனிய பிரதமா் எடி ரமா கூறுகையில், ‘‘நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட துர்ரஸ், திரானா, துமானே ஆகிய நகரங்களில் மீட்புப் பணிகள் துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றாா். மீட்புப் பணிகளுக்கு சா்வதேச உதவிகள் நாடப்பட்டுள்ளதாக அல்பேனிய அதிபா் இலிா் மேதா தெரிவித்தாா்.