பாகிஸ்தானின் கராச்சி – ராவல்பிண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் தேஸ்கொம் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
இன்று(வியாழக்கிழமை) காலை ரஹீம் யார்கான் அருகே லியாகத்பூரில் சென்றுகொண்டிருந்தபோது ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.காற்றின் வேகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் உள்ள பெட்டிகளுக்கும் பரவியது.
இதன்காரணமாக சில பயணிகள் தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்ரகள் தீயை கட்டுப்படுத்தி விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோர தீ விபத்தில் ஆரம்பத்தில் 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் இதுவரையில் 74 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.காயமடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.
சமையல் எரிவாயு வெடித்தமை காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.