On the Planet Jupiter சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளிக் கழகம் இணைந்து நிறுவியுள்ள உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் பிரபஞ்சத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளை தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறது. அந்த வகையில், இந்த தொலைநோக்கி மற்றொரு குறிப்பிடத்தக்க ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாசாவின் வானியலாளர்கள், தொலைநோக்கியிலிருந்து கிடைத்த தரவுகளைக் கொண்டு வியாழனின் நிலவான யூரோபாவின் பனிக்கட்டி மேற்பரப்பில் உள்ள ஒரு பகுதியில், கார்பன் டை ஆக்சைட் இருப்பதை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
கார்பன் என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று, இந்நிலையில் சமீபத்திய ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலெஸ்கோப்பின் கண்டுபிடிப்பு, வேற்றுகிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான தேடலின் ஒரு முக்கியமான முன்னேற்றமாக நாசா கருதுகிறது. ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் கூற்றுப்படி, யூரோபாவின் மேற்பரப்பில் கண்டறியப்பட்டுள்ள கார்பன் யூரோபாவின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள கடலில் தோன்றியிருக்கலாம் எனத் தெரிகிறது. அதே சமயம் இந்த கார்பன் விண்கற்கள் போன்ற வெளிப்புற மூலங்களிலிருந்து உருவாகவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சயின்ஸ் என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுகள், யூரோபாவில் உள்ள தாரா ரெஜியோ என்ற பகுதியில் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றன.
இப்பகுதி இளமையாக இருப்பதாகவும், குழப்பமான நிலப்பரப்பு என்று அழைக்கப்படும் ஒரு வித்தியசமான நிலப்பரப்பைக் கொண்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தப் பகுதியில் சீர்குலைந்த பனி மேற்பரப்பு கடலுக்கும் – பனிக்கட்டி மேற்பரப்புக்கும் இடையில் உருவான பொருள் பரிமாற்றமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஹப்பிள் தொலைநோக்கியைப் பயன்படுத்தி கண்டறியப்பட்ட முந்தைய ஆய்வுகள் தாரா ரெஜியோவில் கடலில் இருந்து பெறப்பட்ட உப்புக்கான ஆதாரங்களைக் தெளிவுபடுத்துவதாக குறிப்பிடுகிறார் ஆராய்ச்சியாளர் சமந்தா ட்ரம்போ. மேலும், தாரா ரெஜியோவில் கண்டறியப்பட்டுள்ள கார்பன் டை ஆக்சைடு மிகவும் செறிவூட்டப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார் ட்ராம்போ… இது போன்ற தரவுகளால் வேற்று கிரக உயிர்கள் வாழத் தகுதியுள்ள இடமாக யூரோபா நீண்ட காலமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதை உறுதி செய்வதற்காக வியாழனின் நிலவான யூரோபாவின் கிலோமீட்டர் தடிமனான பனிக்கட்டி ஓட்டுக்கு அடியில் நீரில் நீந்தக்கூடிய செல்போன் அளவிலான கிரையோபோட் ரோபோக்களை அனுப்பும் முயற்சியை பரிசீலித்து வருகிறது நாசா. இதன் மூலம் யூரோபாவில் உயிர்கள் வாழும் சாத்தியக் கூறுகளின் துல்லியமான முடிவுகளை எட்டலாம் என நாசா கருதுகிறது. அதன் முன் முயற்சியாக பறக்கும் நுண் செயற்கைகோள் எனப்படும் ஃபிளைபை களை யூரோபாவின் மேற்பரப்பில் நிலை நிறுத்தி ஆய்வுகளை நடத்தவும் நாசா திட்டமிட்டுள்ளது.
இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் செயல்படுத்துவதற்கான பணிகளையும் நாசா தொடங்கியுள்ளது. அதற்கு அடுத்ததாக யூரோபாவில் மேம்பட்ட பல ஆய்வுகளை நடத்தவும் தயாராகி வருகிறது நாசா. இதன் மூலம், பூமிக்கு வெளியில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான தேடலில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
Kidhours – On the Planet Jupiter, On the Planet Jupiter update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.