Human Embryos From Cells சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகளால் பெரும்பாலான பெண்களுக்கு கருத்தரித்தல் குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பிட்ட நாடுகள் என்றில்லாமல் பெரும்பலான உலக நாடுகளில் இந்த சிக்கல் இருக்கிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக டெஸ்ட் டியூப் கருத்தரித்தல், வாடகைத் தாய் உள்ளிட்ட செயற்கை கருத்தரித்தல் முறைகளை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் மகப்பேறியல் மருத்துவ விஞ்ஞானிகள் இப்போது இன்னும் முன்னேறிய கருத்தரித்தல் முறையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் முதற்கட்டமாக ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம் செல்களிலிருந்து மனித கருக்களின் முழுமையான மாதிரிகளை உருவாக்கி அவற்றை கருப்பைக்கு வெளியே வளர்த்து சாதனை படைத்துள்ளனர்.
ஸ்டெம் செல்களை ஒன்றிணைத்து ஒரு சிறிய திசு பந்து போல உருவாக்கிய கருக்கள் மனித கருக்களில் இருக்கும் அம்சங்களை ஒத்துப்போகும் அளவிற்கு ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு வளர்க்கப்படுகின்றன. அப்படி வளர்க்கப்பட்ட செயற்கை கரு 14 ஆம் நாளில் மனித கருவின் அமைப்பு மற்றும் உருவவியல் ஒற்றுமையைக் கொண்ட முதல் கரு மாதிரியாகும்.
இரண்டு வாரங்களில், செல்களின் பந்துகள் அரை மில்லிமீட்டர் அகலத்தில் இருந்தன என்கிறார் இஸ்ரேலில் உள்ள வைஸ்மேன் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜேக்கப் ஹன்னா.
இந்த சிறிய செயற்கை கரு மனித கருக்களுக்கு ஒத்ததாக இல்லை என்றாலும், மனித வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளின் மர்மங்கள் மற்றும் இதுவரை அறியப்படாத கருச்சிதைவுக்கான காரணங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட விரைவில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அதே போல, ஹன்னா எதிர்பார்க்கும் மற்றொரு அம்சம், நோயுற்ற நோயாளிகளின் தோல் செல்களில் இருந்து மாதிரி கருக்களை உருவாக்குவதாகும். மாதிரி கருக்களை ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக வளர்த்து, அவை நாள்பட்ட நோயாளிகளுக்கு மாற்றப்பட வேண்டிய உயிரணுக்களின் ஆதாரமாகப் பயன்படுத்தக்கூடிய உறுப்புகளை உருவாக்கத் தொடங்கும் என்றும் ஹன்னா உறுதியளிக்கிறார்.
ஒரு கரு மாதிரியை உருவாக்குவதற்கும், அவர்களின் உயிரைக் காப்பாற்றும் அல்லது அவர்களின் மருத்துவத் தேவையைத் தீர்க்கும் செல்களை உருவாக்குவதற்கும் தங்கள் சொந்த தோல் செல்களைக் கொடுக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறதா? என்பதில் முடிவெடுப்பது தான் இப்போதைக்கு பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று எனக் கூறும் ஹன்னா, திசுக்களைக் கொண்டு ஒரு மாதிரி கருவை வளர்ப்பதற்கு முன், அந்தக் கருவில் மூளை அல்லது நரம்பு மண்டலத்தை உருவாக்கவில்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்த அதன் மரபணுக்களை மாற்றியமைப்பார்கள் என்கிறார்.
ஏனென்றால் கருவின் 14 ஆம் நாள் வளர்ச்சியில் நுரையீரல் மற்றும் மூளை உருவாகத் தொடங்கும் என்பது தான் மருத்துவ ரீதியான உண்மை. உண்மையான மனித கருக்கள் மீது மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகளை மதிப்பிடுவதற்கு மாதிரி கருக்களை பயன்படுத்தும் திட்டம் ஆராய்ச்சியாளர்களிடம் இருக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து விலக்கப்படுவதால், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சில பொதுவான சிகிச்சைகளின் பக்கவிளைவுகள் என்ன என்பது குறித்து சரியான புரிதல் மருத்துவர்களுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தக் குறையைப் போக்கும் முயற்சி தான் ஸ்டெம் செல்கள் மூலம் தயாரிக்கப்படும் செயற்கை கரு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
புதிதாக தயாரிக்கப்பட்ட மனித கருவுக்கு சமமான மாதிரி கருக்கள் ஒரு வாரம் வரை ஆய்வகத்தில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் அந்த செயற்கை கருகக் பெண்ணின் கருப்பையில் பொருத்துவது உயிரியல் ரீதியாக சாத்தியமற்றது என்கிறார் பேராசிரியர் ஜேக்கப் ஹன்னா.
கேம்பிரிட்ஜ் அருகே உள்ள பாப்ரஹாம் நிறுவனத்தின் கரு வளர்ச்சி தொடர்பான ஆய்வில் இருக்கும் டாக்டர் பீட்டர் ரக்-கன், இந்த வேலை மிகவும் சுவாரஸ்யமானது என்கிறார். ஆனால் ஆரம்பகால மனித கருக்களின் அனைத்து அம்சங்களும் இந்த செயற்கை கருவில் சரியாகப் பிரதிபலிக்கப்படவில்லை என்றும், குறிப்பாக நஞ்சுக்கொடியின் ட்ரோபோபிளாஸ்ட் செயற்கை கருவில் இருந்தது என்றும், ஆனால் சரியாக ஒழுங்கமைக்கப்படவில்லை என்றும் கூறுகிறார் பீட்டர் ரக்.
செயற்கையில் உருவாக்கப்படும் இது போன்ற கரு கருப்பைக்குள் வைத்து வளர்க்க முடியாது. ஏனெனில் இந்த செயற்கை கரு, மனிதக் கருப்பையுடன் இணைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்றும் கூறுகிறார் பீட்ர் ரக். ஆனாலும், செயற்கை கருவை உருவாக்கி அதை மனித கருப்பைக்குள் செலுத்தி வளர்க்கும் முயற்சியில் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருக்கும் மகப்பேறியியல் மற்றம் கரு உருவாக்கல் துறையின் விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Human Embryos From Cells , Human Embryos From Cells report
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.