Ghosts Roam City சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகம் முழுவதுமே பேய்கள், ஆவிகள் போன்ற அமானுஷ்ய சக்திகள் குறித்து பல கதைகள் உள்ளன. இன்றும் கூட இதையெல்லாம் உண்மை என்று நம்பும் மக்கள் நம்மிடையே இருந்து வருகிறார்கள். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரம் அச்சுறுத்தும் கதைகளுக்கு பெயர் போனது. இங்கு அவ்வப்போது புதுப்புது பேய்க் கதைகள், அமானுஷ்ய சம்பவங்கள் நிஜத்தில் நடந்ததாக பலரும் கூறுவார்கள். இதை உறுதி செய்வது போல் சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
வீடியோ கேம்ஸ் நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், பர்மிங்காமில் வசிக்கும் 31 சதவிகிதத்தினர், தங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் பேயை நேரில் பார்த்துள்ளதாக கூறியுள்ளனர்.
“எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. அப்போது எனக்கு 18 வயதிருக்கும்.
என்னுடைய படுக்கையறையில் இருந்த போது, கையில் கூடையோடு மனித உருவில் ஏதோவொன்று என்னுடைய அறையை கடந்து சென்றது. நான் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே பயத்தில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன். ஆமாம், நிச்சியம் அது பேய்தான்” எனக் கூறுகிறார் 43 வயதாகும் கிரேக். இவர் பர்மிங்காம் நகரில் வசித்து வருகிறார்.
இரண்டாம் இடத்தை இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரம் பிடித்துள்ளது. இங்குள்ள 25 சதவீத மக்கள், தங்கள் வாழ்க்கையில் பேயை நேரில் பார்த்ததாக கூறியுள்ளனர். இதற்கடுத்த இடத்தில் முறையே நாட்டிங்காம், லிவர்பூல், நியூகாஸ்டில் ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளது. இந்த ஆய்வில் பிரிஸ்டோலியன்ஸ் நகரத்தில் தான் குறைவான மக்கள் பேய்களை நேரில் பார்த்துள்ளதாக கூறியுள்ளனர்.
“கிட்டதட்ட நாம் அனைவருமே பேய்களோடுதான் வாழ்ந்து வருகிறோம். இந்த பேய்கள் எல்லாம் யாரென்று நினைக்கிறீர்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களும் உங்கள் உறவினர்களும் தான் உங்களோடு பேய்களாக உலாவிக் கொண்டிருக்கிறார்கள். 90 சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் தங்கள் வீட்டில் ஆவிகள் உலாவுவதை நேரில் பார்த்துள்ளார்கள்” எனக் கூறுகிறார் அமானுஷ்ய விஷயங்களில் நிபுணத்துவம் பெற்ற ராப் பைக்.
“வெறுமனே மக்களை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது அவர்களது கண்களுக்கு தெரிய வேண்டுமா, இல்லையா என்பதை ஆவிகள்தான் முடிவு செய்ய முடியும். நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியை கூட ஏற்படுத்தலாம். நான் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ஒரு பேயாக உலாவிக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? நம்மை கடந்து செல்லும் போது புகையிலை வாசம் வரும். அப்படி வந்தால் அந்த ஆவி அங்குதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
இப்போது நானும் அவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். இதுபோன்ற ஆவிகள் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படுத்தாது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை அப்படியே தொடர்ந்தபடி இருப்பார்கள்” எனக் கூறுகிறார் ராப் என்பவர். இவர் கடந்த நாற்பது வருடங்களாக பேய்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
Kidhours – Ghosts Roam City
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.