Japan Slim Spacecraft பொது அறிவு செய்திகள்
ஜப்பானில் விண்வெளி ஆய்வு நிறுவனமான (JAXA) Smart Lander for Investigating Moon சுருக்கமாக SLIM விண்கலத்தை விண்ணில் செலுத்த தயாராகியுள்ளது. ஸ்லிம் விண்கலம் எடை குறைந்த லேண்டர் மற்றும் எக்ஸ்ரே இமேஜிங் செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ஜப்பான் விஞ்ஞானிகள் இத்திட்டத்திற்கு ’மூன் ஸ்னைப்பர்’ என்று பெயரிட்டுள்ளனர். நாளை (ஆகஸ்ட் 28) ஏவப்படும் இந்த ஸ்லிம் விண்கலம் நிலவை அடைய சுமார் 4 முதல் 6 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமே நிலவில் துல்லியமான தரையிறங்கும் நுட்பங்களை ஆராய்வது.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஸ்லிம் விண்கலத்தை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு மாற்றி அறிவித்தனர். ஏற்கனவே விண்ணில் செயற்கைக்கோளை செலுத்தும் போது பல விதமான சிக்கல்களை சந்தித்த நிலையில், இந்த முறை வெற்றியடைய ஜப்பான் விஞ்ஞானிகள் முனைப்பு காட்டிவருகின்றனர். கடந்த 2022 நவம்பரில் நிலவில் லேண்டர் தரையிறங்கும் முயற்சி ஜப்பானுக்கு தோல்வியை தந்தது. கடந்த மாதம் ஒரு ராக்கெட் வெடித்து சிதறியது நினைவிருக்கலாம்.
சுமார் 700 கிலோ எடைக்கொண்ட ஸ்லிம் விண்கலம் சிறிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நிலவின் 100 கிமீ., தொலைவில் தரையிறக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. 3 மீட்டருக்கு குறைவான உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள லேண்டர் நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரை நிலவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா மட்டுமே தரையிறங்கிய நிலையில், ஜப்பானும் அந்த பட்டியலில் இணைய முயற்சி எடுத்து வருகிறது.
கடந்த வாரம் இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்று நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டு பின்னர் பிரக்யான் ரோவர் நிலவை வலம் வந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் ரஷ்யாவின் லூனா 25 திட்டம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Japan Slim Spacecraft
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.