Thursday, November 21, 2024
Homeகல்விசிறுவர்களுக்கான குட்டிக்கதைகள்

சிறுவர்களுக்கான குட்டிக்கதைகள்

- Advertisement -

கொடுத்துப் பெறுதல்

- Advertisement -

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

- Advertisement -

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு “உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?” என்று கேட்டார்.

- Advertisement -

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

கை மேல் பலன் கிடைத்தது !

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் ‘அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்’ என்று நம்பிக்கை ஊட்டினார்.
மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். “அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் ‘வாக்கிங்’ போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து ‘இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு’ என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. ‘நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி’ என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். ‘மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?’ என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட ‘எஸ்கேஏஏஏஏ..ப்’ ஆகிவிட்டார் என்று கேள்வி!!!

காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது

இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது.

கடைக்காரரிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டார்கள். அவரும் அதை வாழைப்பழம் என்று அடையாளம் சொல்லி அதை எப்படி உரித்துத் தின்பது என்றும் செய்து காண்பித்தார்.

நம் ஜப்பானிய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட உடன் இருவரும் பழத்தை உரித்து உண்ணத் தொடங்கினார்கள்.

முதலாமவன் பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் சரியாக ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. உடனே ரயில் பெட்டிக்குள் கும்மிருட்டு பரவியது.

அவன் உடனே இரண்டாமவனிடம் அவசரமாக கத்தினான். ‘நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டென். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே’ என்றான் அவன்.

வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு “யாராவது காப்பாற்றுங்கள்’ என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. “பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு” என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு “நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். “ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?” என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே “தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்” என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். “நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்” என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து “அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே” என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.