பகலில் வெயில் அடித்த போதிலும், இரவில் குளிரான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது மழைத்தூறலும் விழுகிறது. மாறி வரும் சீதோஷ்ண நிலையால் குழந்தைகள், பெரியவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மழைக்காலத்தில் தேங்கும் நீரால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, மார்புச் சளி, ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. இந்த நோய்கள் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். 102 டிகிரி காய்ச்சல் இருக்கும். வைரஸ் காய்ச்சலாக இருந்தால் உடல் வலி அதிகமாக இருக்கும்.
மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிரச்சினை ஏற்படும் அவற்றை நாம் சாதாரணமாக நினைத்து விட்டுவிடக்கூடாது. உடனே அதற்கு தகுந்த தீர்வை அளிக்க வேண்டும்..
குழந்தைகள் படுக்கும் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் உடனே துணிகளை மற்ற வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்க வைக்கக்கூடாது.
மழை மற்றும் குளிர் காலத்தில் ஈரக்காற்று படாதவாறு குழந்தையின் உடலையும், காதுகளையும் கம்பளியால் சுற்றி மூடவேண்டும்.
குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் நன்கு கொதிக்க வைத்த ஆறிய தண்ணீரை கொடுக்கவேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை கொடுக்க வேண்டும்.
குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்க கூடாது. பாலூட்டும் தாய்மார்களுக்கு முதலில் சளி தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தலை குளித்தால் தலை முடியை நன்கு துவட்டிய பிறகே குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைக்கு பாலூட்டும்போது குழந்தைக்கும் வயிற்று கோளாறுகளை உண்டாக்கிவிடும்.
பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்ச்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும்.