அனைத்துத் தரக்குடும்பங்களிலும், நடைபெறும் ஒரு நிகழ்வு, அடுத்தடுத்துப் பிறந்த சகோதரர்களிடையே ஏற்படும் சிறுசிறு சண்டைகள். இந்த சிறு சிறு சண்டைகளுக்கு பஞ்சாயத்து செய்ய முடியாமல் பல பெற்றோர்கள் விழி பிதுங்குகிறார்கள். இப்படிப்பட்ட சிறு சிறு சகோதரச்சண்டைகளுக்கு காரணம் என்ன என்பது பற்றி இங்கு அலசுவோம்.
முதல் குழந்தை பிறந்தவுடன் அதன் மீது அதிக அன்பு கொள்ளும் தாய், அதே போன்ற அன்பை இரண்டாவது குழந்தையிடமும், காட்டும் போது முதல் குழந்தைக்குப் பொறாமை ஏற்படுகிறது. தன் அம்மாவின் அன்பு முன்பு போல் இல்லையே, அதை தம்பி பிடுங்கிக் கொண்டானே என்ற எண்ணம் அவனிடம் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது.
பொதுவாக ஒரு தாய் தன் குழந்தைகளை சரிசமமாக கவனிக்க முடிவதில்லை. அப்படிப்பட்ட தாயை “ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கிறார்” என்று விமர்சனம் செய்கிறோம், ஆனால் நாம் அதை அவ்வாறு, பார்க்கக் கூடாது, தாயின் அன்பு ஆற்று வெள்ளம் போன்றது. மேட்டுப் பகுதியில் குறைந்த அளவும், தாழ்வான பகுதியில் அதிக அளவும் பாய்ந்து மொத்தத்தில் அவர்களது மட்டத்தை சரிசமப்படுத்தக்கூடியது. அதாவது சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையிடம் அதிக அக்கறையும், அது போன்ற சிறப்பு கவனம் தேவைபடாத குழந்தையிடம் சிறிதளவு அக்கறையும் செலுத்துகிறார் தாய்.
இயற்கையாகவே இளைய குழந்தை, மூத்தக் குழந்தையை ஒப்பிடும் போது, அதிக கவனம் தேவைப்படுகிற குழந்தையாகவே உள்ளது. எனவே தாய் இளைய குழந்தையிடம் அதிக அக்கறை செலுத்துகிறார். அதனால் மூத்தகுழந்தையிடம் பொறாமை ஏற்படுகிறது.
இரு குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சகோதரச் சண்டையின் மூலக்கரணமே இந்த பொறாமையும், அதனால் ஏற்படும் போட்டியுமே ஆகும்.
தன்னை புறக்கணிக்கிறார்கள் என்றும், தனக்கு ஒரு அங்கீகாரம் இல்லை என்றும் மூத்தப் பிள்ளைக்கு எண்ணம் தோன்றுகிறது. இதைத் தீர்க்க என்ன செய்யலாம்? இதற்கும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழிமுறையே நமக்கு கைகொடுக்கும். நம் முன்னோர்கள் குடும்பத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் மூத்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். மூத்தப் பிள்ளைதான் தந்தைக்குப் பின் ஆட்சி அரியணை ஏற முடியும். இதையே நம் பிள்ளைகளிடமும் பின்பற்றி இந்த சிறுசிறு சகோதரச் சண்டைகளுக்கு தீர்வு காணலாம். அது எப்படி?
இரு குழந்தைகளுக்கும் இரு பொருட்கள் வாங்கி வந்தால் மூத்தவனிடம் கொடுத்து அவன் விரும்பியதை எடுத்துவிட்டு, பின் அவன் மூலமாக இளையவனுக்குத் தர பழக்கலாம்.
இந்தப் பழக்கத்தின் மூலம் மூத்தவனுக்குத்தான் முன்னுரிமை உண்டு என்ற எண்ணம் இளையவனுக்கு வலுப்படும். அதே சமயம் தான்தான் இளையவர்களை பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை மூத்தவனுக்கு வலுப்படும்.
காலப்போக்கில் இளையவனுக்கு எது பிடிக்குமோ அதை விட்டுக்கொடுக்கும் நிலைக்கு மூத்தவன் வந்து விடுவான். அந்த நிலையில் இது போன்ற சிறுசிறு சகோதரச் சண்டைகள் முற்றிலும் நின்று விடும். ஒருவருக்கொருவர் பாசப்பரிமாற்றம் செய்துகொள்வர்.
நாமும் நம்முடைய அன்பை, கருணையை இளையபிள்ளையிடம் நேரடியாக காட்டாமல், மூத்தப் பிள்ளை மூலமாக வெளிப்படுத்த பழகவேண்டும். படிப்படியாக நாம் காட்டும் சிறப்புக்கவனத்தை மூத்தப்பிள்ளையும், காட்டத்தொடங்கும் சகோதரச் சண்டை மாறி சகோதர ஒற்றுமை வலுப்படும்….