World Record பொது அறிவு செய்திகள்
இயற்கை எப்போதும் புதிய புதிய ஆச்சர்யங்களை மனிதர்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கும். சென்ற மாதம் நீண்ட தூரம் விடாமல் பறந்த பட்டை-வால் காட்விட் பறவை கின்னஸ் சாதனை படைத்தது. இப்போது உலகின் அதிக எடை கொண்ட தேரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஆஸ்திரேலிய ஏர்லி கடற்கரைக்கு அருகில் உள்ள கான்வே தேசிய பூங்கா மழைக்காடு பாதையில் ரோந்து பணியை மேற்கொண்ட ரேஞ்சர்கள், கடந்த வாரம் ஒரு ராட்சத கரும்புத் தேரையை கண்டு பிடித்துள்ளனர்.
ரேஞ்சர் கைலி கிரே கூறுகையில், ரோந்து பணியின் போது பாதையின் குறுக்கே ஒரு பாம்பு வந்ததால் வாகனத்தை நிறுத்தினோம். அப்போது பாதையின் அருகே ஒரு கால்பந்துக்கு கை கால் முளைத்தது போன்ற ஒரு உருவம் தென்பட்டது. பின்னர் தான் அது கரும்பு தேரை என்பது தெரிந்தது.
ராட்சத தேரையை முதலில் பார்த்ததும் நம்பவில்லை. பின்னர் அதை மண்ணில் இருந்து தூக்கி பார்க்கும் போதுதான் உறுதியானது. அதன் பெரிய உருவத்தை வைத்து அது ஒரு பெண் தேரை என்ற முடிவுக்கு வந்தோம்.
தேரையை பொறுத்தவரை ஆண் இனத்தை விட பெண் இனம் தான் பெரியதாக இருக்கும். அதன் எடையை கணக்கிடுவதற்காக தேரையை பெட்டியில் அடைத்து காப்பகத்திற்கு எடுத்துவந்துள்ளனர்.
இந்த “மான்ஸ்டர்” தேரையானது சராசரி தேரை விட ஆறு மடங்கு பெரியதாக இருக்கும். கரும்பு செடிகளுக்கு வரும் பூச்சிகளை கொல்வதற்காக இந்த கரும்பு தேரைகள் 1935 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அவை 2 பில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
26 செ.மீ. வரை வளரும் பெரிய கரும்பு தேரை தன் வாயில் பொருத்தக்கூடிய எதையும் சாப்பிடும். சாதாரணமாக 2.5 கிலோ எடை வரை இருக்குமாம். 1991 ஆம் ஆண்டு ஸ்வீடனில் உள்ள ப்ரின்சென் என்ற செல்லப் பிராணி தேரை 2.65 கிலோ எடையுள்ள மிகப்பெரிய தேரை கின்னஸ் உலக சாதனையாக இருந்தது.
ஆனால் தற்போது வடக்கு ஆஸ்திரேலிய பகுதியில் கண்டறியப்பட்ட “டோட்ஜில்லா” என்று அழைக்கப்படும் கரும்புத்தேரை 2.7 கிலோ எடை கொண்டுள்ளது. இனி இது தான் அதிக எடை கொண்ட தேரை என்று உலக சாதனை படைத்துள்ளது.
இந்த இனம் 15 வருடங்கள் வரை காடுகளில் வாழக்கூடியது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தேரை அதை விட நீண்ட காலம் வாந்துள்ளதாக தெரிகிறது.ஆஸ்திரேலியாவில் தேரைகளை இயற்கையான வேட்டையாடும் உயிரினம் எதுவும் இல்லை. அதனால் இவை பூர்வீக பூச்சிகள் மற்றும் விலங்குகளை அதிக எண்ணிக்கையில் சாப்பிட்டு அதன் அழிவுக்கு வழிவகுத்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் பூச்சிகளுக்கான வழக்கமான நடைமுறையைப் போலவே டோட்ஜில்லா கருணைக்கொலை செய்யப்பட்டது, மேலும் இது குயின்ஸ்லாந்து அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Kidhours – World Record, GK News,gk tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.