Monolithic sandstone Sivalinga of 9th c CE is latest find in ongoing conservation project in Vietnam
வியட்நாம் நாட்டில் குவாங் நாம் மாகாணத்தில் My Son என்ற பெயரில் பழமையான சிவபெருமான் கோயில் உள்ளது. சம் இனத்தைச் சேர்ந்த மன்னர் பத்ரவர்மன் -1 காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. கோயிலின் தற்போதைய பகுதி 9- வது நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அமெரிக்கா – வியட்நாம் போரின் போது, 1969- ம் ஆண்டு இந்த கோயில் மீதும் போர் விமானங்கள் குண்டு வீசின. இதில், கோயிலின் பெரும் பகுதிகள் சேதமடைந்தன.
பண்டைய காலத்தில் இந்தியா, வியட்நாம் நாடுகளுக்கிடையே பரிமாறப்பட்ட கலாசாரம், கட்டடக் கலையின் அடிப்படையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து கட்டடக்கலை அடிப்படையில் வியட்நாமில் கோயில்கள் கட்டப்பட்டதற்கு உதாரணமாக இந்த கோயில் திகழ்கிறது.
கடந்த 2011- ம் ஆண்டு முதல் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் வியட்நாம் அரசின் ஒத்துழைப்புடன் இந்த கோயிலில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த பத்து நாள்களில் மேற்கொண்ட அகழ்வராய்ச்சியின் பலனாக பழமையான சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த சிவலிங்கம் 1,100 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
இந்தியா- வியட்நாம் நாடுகளுக்கிடையே பண்டைய கால உறவை பறைசாற்றும் வகையில் இந்த சிவலிங்கம் கிடைத்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட் செய்து மகிழ்ந்துள்ளார். இது போன்று மேலும் 6 சிறிய சிவலிங்கங்களும் அகழ்வராய்ச்சியில் கிடைத்துள்ளன.
பிரமாண்ட சிவலிங்கம் கிடைத்தையடுத்து, தொடர்ந்து இந்த கோயிலில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், இன்னும் வியக்கத்தக்க பண்டைய கால பொருள்கள் கண்டெடுக்கப்பட வாய்ப்புள்ளது.