அமெரிக்காவில் ஒரு வயது இரட்டைக் குழந்தைகளை தந்தை ஞாபக மறதியால் காருக்குள் விட்டுச் சென்றதால் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது மனதை நொறுங்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராக் லேண்ட் நகரைச் சேர்ந்தவர் ஜுவான் ரோட்ரிக்ஸ்(39). இவரது மனைவி மரிசா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் லூனா மற்றும் போனெக்ஸ் என்ற இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர்.
இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளை பாதுகாப்பு மையத்தில் விட்டுச் செல்வது வழக்கமாக கொண்டிருந்தனர்.
மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஜுவான் சம்பவத்தன்று தனது 4 வயது மகனை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் விட்டுவிட்டு, காரின் பின்புறத்தில் இருக்கும் குழந்தைகளை விடுவதற்கு மறந்துவிட்டார்.
பின்னர், பணி முடிந்த பின்பு எப்போதும் போல் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்லும் வழியில் யதார்த்தமாக காரின் பின் இருக்கையை அவதானித்துள்ளார்.
குறித்த இரட்டைக் குழந்தைகள் வாயில் நுரை தள்ளியவாறு அசைவற்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தார். பின்பு பொலிசாரின் உதவினை நாடியதால் அவர்கள் குழந்தைகளை பரிசோதித்து பார்த்த போது அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ஆம் தொடர்ந்து நடந்த மருத்துவ சோதனையில், குழந்தைகள் எட்டு மணி நேரம் காரில் இருந்துள்ளதால், அதன் வெப்பம் தாங்காமல் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையறிந்த தந்தை நானே எனது குழந்தைகளை கொன்றுவிட்டேனே என்று கதறி அழுதுள்ளார்.
பின்பு கைது செய்யப்பட்ட ஜுவானுக்கு 1 லட்சம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறையிலிருந்து வெளியில் வந்த ஜுவானை அவரின் மனைவி மரிசா கண்ணீருடன் கட்டித்தழுவி அழுதுள்ளார்.
அவர் கூறுகையில், குழந்தைகளை அவ்வளவு பார்த்துக்கொள்வார் எனது கணவர், ஒருநாளும் குழந்தைகளை கொடுமைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டது கிடையாது. தற்போது அவரது மறதியால் எங்களது குழந்தைகளை பறிகொடுத்துவிட்டோம். எனது கணவரை எப்பொழுதும் நான் தவறாக நினைக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.