டிவி, கம்ப்யூட்டர், செல்போன் போன்ற மீடியாக்களின் தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோருடன் பேசுவது / அல்லது குழந்தையோடு பெற்றோர் பேசுவது என்பதே குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிரவும், அதை அறிந்து,குழந்தையும் தன் குழந்தைப் பருவத்து தருணங்களை நினைத்து பெருமை கொள்ளக் கூடும்.
குழந்தைகளுக்கு நல்ல கதைகள் சொல்வதன் மூலம், வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்ற நல்ல குணங்களை அவர்களின் மனதில் எளிதாக விதைக்க முடியும். குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் உண்டாகிறது.
பழங்காலத்து கதைகள் மூலம் நம் தமிழ் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம்.கற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உங்கள் குழந்தை மனம் துவண்டு, தோல்வி அடைந்து இருக்கும் சூழ்நிலையில், ஒரு பெற்றோராக நீங்கள் கூறும் அறிவுரைகளை விட, அந்த சூழலுக்குஏற்ற ஒரு நல்ல கதை அவர்கள் மனதை உற்சாகப் படுத்தும். தாய் -தந்தை / தாத்தா பாட்டியும் இதே மாதிரி ஒரு நிலையை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு / நம்பி, ஊக்கம் அடைவார்கள்.
கதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள், முக பாவங்கள், மற்றும் செய்கை / நடிப்பு என்று சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள்.
குழந்தைக்கு இரவு நேரங்களில் இனிமையான கதைகளை சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள். அதே போல் குழந்தைகளையும் உங்களுக்கு கதை சொல்லச் சொல்லி, பொறுமையாய் கேளுங்கள். இதனால் குழந்தைகளுக்கு மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். தன்னம்பிக்கை வளரும்.
குழந்தைகளையே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும்.எனவே இவ்வாறான நன்மைகள் கொண்ட கதைகளில் கொஞ்சம் அதிகம் நாட்டம் காட்டுவோம்.
இப்போது அவ்வாறான அழகிய இரு கதைகள் பார்ப்போம்…
மூவரின் கதை!
குருகுலத்தில் சேர்ந்தான், ஒரு இளைஞன். யோகம், தியானம் போன்ற பயிற்சிகள் பெற்றான். பயிற்சி முடிந்ததும் குருநாதரை வணங்கி நின்றான்.
‘இங்கு கற்றவை, உனக்கு மிகவும் பயன்படும்; வெற்றியடைய வாழ்த்துகள்…’ என்று விடை கொடுத்தார், குருநாதர்.
புதிய மனிதனாக, ஊர் திரும்பியவனை புகழ்ந்தனர் மக்கள். அவன் மனம், ஆனந்தக் கடலில் நீந்தியது.
அன்று இரவு –
இளைஞனுக்கு நல்ல துாக்கம்; கனவில் ஞான தேவதை தோன்றினாள்.
‘குருகுலப் பயிற்சி எப்படி இருந்தது. போதிய ஞானம் பெற்று விட்டாயா…’ என்று கேட்டாள்.
‘ஆம்… சிறப்பாகப் பெற்று விட்டேன்; நீங்கள் யாரம்மா…’
‘நான், ஞான தேவதை; குருகுலத்தில் நீ பெற்ற ஞானத்தை சோதிக்க வந்தேன்…’
‘வெற்றி பெறும் அளவு ஞானம் பெற்று விட்டேன் அம்மா…’ என, பெருமிதம் பொங்க கூறினான், இளைஞன்.
‘நீ சொல்வதெல்லாம் சரி தான்; உன் குருநாதர், மூவர் கதையைக் கூறினாரா…’
‘அப்படி ஒன்றும் சொல்லவில்லையே…’
‘மூவர் கதை தெரியாமல், எப்படி வெற்றி அடைய முடியும்…’
ஞான தேவதை கூறியதைக் கேட்ட இளைஞனுக்கு, தலையில் ஏறியிருந்த பெருமிதம் இறங்கியது. இன்னும் கற்க வேண்டியவை ஏராளம் என்பதை உணர்ந்து, ‘அம்மா… அந்தக் கதையைக் கூறுங்கள்…’ என்றான்.
ஞான தேவதை சிரித்தபடியே, ‘இளைஞனே… அந்த மூவர் யார் தெரியுமா… விட்டுக் கெட்டவன், விடாது கெட்டவன், தொட்டுக் கெட்டவன்…’ என்று சொன்னாள்.
‘விட்டுக் கெட்டவன் கதையைச் சொல்லுங்கள்…’
‘திருமால், வாமன வடிவம் எடுத்து, மூன்றடி நிலம் கேட்ட போது, ஒரு அடிக்கு, விண்ணையும், இன்னொரு அடிக்கு, மண்ணுலகையும், மூன்றாவது அடிக்கு, தன்னையும் கொடுத்து கெட்டவன் தான், மகாபலி என்ற அரசன்…’
‘மகாபலியின் தியாகம் போற்றக் கூடியது தானே…’
‘உண்மை தான்… ஒருவருக்கு வாக்குக் கொடுக்கும் முன், யோசிக்க வேண்டாமா… தன்னையே அழிக்கும் அளவுக்கு, எவருக்கும் வாக்குக் கொடுக்க கூடாது என்பதை, மகாபலி கதை மூலம் புரிந்து கொள்…’
‘சரியம்மா… விடாது கெட்டவன் கதையைச் சொல்லுங்கள்…’
‘பாண்டவர்களின் துாதனாக, துரியோதனிடம் சென்றான், கண்ணன். ஐந்து காணி நிலமாவது கொடுக்கப் பரிந்துரைத்தான். துரியோதனன் மறுத்தான். ஐந்து வீடுகளையாவது கொடுக்க கூறினான். அதையும் மறுத்த துரியோதனனும், அவன் சுற்றத்தாரும் பூண்டோடு அழிந்தனர்…
‘கொஞ்சம் விட்டு கொடுத்திருந்தால், துரியோதனன் சிறப்பாக வாழ்ந்திருக்க முடியும். விடாது கெட்டு அழிந்தான். இந்த மண்ணில், விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போக வேண்டும் என, புரிந்து கொள்…’
‘சரியம்மா… உங்கள் அறிவுரையை பின்பற்றுகிறேன். தொட்டுக் கெட்டவன் கதையை சொல்லுங்கள்…’
‘பத்மாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்தான்; தன் கைப்பட்டவர் உடனே, பஸ்பமாகி விட வேண்டும் என, ஈஸ்வரனிடம் வாரம் பெற்றான். எதிரே வந்தவர்களை எல்லாம் பஸ்பமாக்கி அட்டகாசம் செய்தான்…
‘வரம் கொடுத்த ஈஸ்வரன் தலையிலே கை வைக்கப் போனான்; தப்பி ஓடுவதைப் போல், பாவனைக் காட்டினார், ஈஸ்வரன். அவன் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட, விஷ்ணுவுடன் ஆலோசித்து, ஒரு முடிவு எடுத்தார்.
‘அதன்படி, மோகினியாக வடிவம் எடுத்தார் விஷ்ணு. அந்த மோகினியிடம் மயங்கிய பத்மாசுரனை, தன் தலை மீதே கை வைக்க துாண்டினார். பத்மாசுரனும் அவ்வாறே பஸ்பமானான்…’ என்றாள், ஞான தேவதை.
‘சரியம்மா… இக்கதை மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன…’
‘மோகத்தில், வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே…’
ஞான தேவதையின் அறிவுரையைக் கேட்ட இளைஞன், ‘வாழ்வதற்கு போதுமான அளவு ஞானம் கொடுத்து விட்டீர்கள்; என் தற்பெருமையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி…’ என்றான்.
‘வெற்றியடைய வாழ்த்துக்கள்…’ என மாறைந்தாள், ஞான தேவதை. அந்த இளைஞனின் துாக்கம் கலைந்தது. மனதில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.
மன்னரும், சந்தன வியாபாரியும்!
மதுராபுரி நாட்டை, மன்னர் போஜராஜன் ஆண்டு வந்தார். அவர் நீதி தவறாதவர். குடிமக்கள் நலனைப் பற்றியே, இரவு, பகலும் சிந்திப்பார். நலத்திட்டங்களை வகுத்து மக்கள் சுபிட்சமாய் வாழச்செய்தார்.
வாரம் ஒருமுறை, நாட்டை வலம் வருவார். மக்களிடம் குறைகளைக்கேட்டு, தீர்த்து வைப்பார். அப்போது, பார்ப்பவர்களை எல்லாம் நலமுடன் வாழ வேண்டும் என, மனதில் வேண்டிக்கொள்வார்.
கடைவீதியில், ஒரு சந்தன வியாபாரியை பார்க்கும் போது மட்டும் மனதில் வெறுப்பு ஏற்படும். அவனை, ‘கொல்ல வேண்டும்’ என்ற எண்ணம் வரும்.
ஒருநாள் –
நாட்டுவலம் முடிந்து திரும்பியதும் மந்திரி மதிவாணரிடம், ‘ஒவ்வொரு குடிமகனையும் பார்க்கும் போது, வாழ்த்த எண்ணுகிறேன். ஆனால், சந்தன வியாபாரியை மட்டும் கொல்லத் தோன்றுகிறது…’என்றார்.
உரிய காரணத்தை அறிந்து சொல்வதாக, உறுதி சொன்னார் மந்திரி.
மறுநாள், மாறு வேடத்தில் சந்தன வியாபாரி கடைக்குச் சென்றார், மந்திரி. ஒரு சந்தனக்கட்டையை விலை பேசி வாங்கினார். பின், ‘வியாபாரம் நன்கு நடக்கிறதா… போதுமான லாபம் கிடைக்கிறதா…’ என, விசாரித்தார்.
‘சந்தனக்கட்டை விலை அதிகம் என்பதால், வியாபாரம் அவ்வளவாக இல்லை. வருமானம் மிக குறைவு. மன்னரின் தந்தை இறந்த போது, ஒருக்கட்டு சந்தனக்கட்டை வாங்கினர். ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தன. இனி, மன்னர் இறந்தால் தான், நிறைய பொற்காசுகள் கிடைக்கும்…’ என்று, பெருமூச்சு விட்டான், வியாபாரி.
அவன் எண்ணத்தை புரிந்து அரண்மனைக்கு திரும்பினார் மந்திரி.
மறுநாள், மந்திரியாக, சந்தன வியாபாரியை சந்தித்தார் மந்திரி. அவனுக்கு, ஆயிரம் பொற்காசுகள் கொடுத்து, ‘மன்னர் உனக்கு வழங்கியுள்ள பரிசு…’ என, கூறினார்.
மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வியாபாரி, ‘மன்னர், நுாறாண்டுகள் நலமுடன் வாழ வேண்டும்…’ என, வாழ்த்தினான்.
அடுத்த வாரம் –
மன்னர், நாட்டுவலம் சென்றார். சந்தன வியாபாரியைக் கண்டார். அவனைக் கொல்லத் தோன்றவில்லை. மாறாக, வாழ்த்த தோன்றியது.
அரண்மனை திரும்பிய மன்னர், மந்திரியை சந்தித்தார். வியாபாரி மீதிருந்த எண்ணம் மாறியுள்ளதை சொன்னார். மகிழ்ச்சியடைந்த மந்திரி, வியாபாரியை சந்தித்து, பொற்காசுகள் கொடுத்த விவரத்தை தெரிவித்தார்.
மன்னர் போஜராஜன், அந்த அனுபவத்தை, மக்கள் மனதை புரியும் பாடமாக, கற்றுக் கொண்டார்.
குட்டீஸ்… எண்ணங்களுக்கு எவ்வளவு சக்தி இருக்கு பாத்தீங்களா… மனதை நற்சிந்தனைகளால் நிரப்பி, துாய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்!