
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன் – புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன் – கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்ல தம்பி
எங்கள் பாலமுருகன் – சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன் – நம்மைக்
காத்தருள்வான் காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்.
ஒன்று சேர்தல்

கூட்டம் கூட்டமாகவே
குருவி பறந்து சென்றிடும்.
குவியல் குவியலாகவே
கொட்டிக் கற்கள் கிடந்திடும்.
கூறு கூறாய்ச் சந்தையில்
கொய்யாப் பழங்கள் விற்றிடும்.
குலை குலையாய்த் திராட்சைகள்
கொடியில் அழகாய் தொங்கிடும்.
வரிசை வரிசையாகவே
வாழை தோப்பில் நின்றிடும்.
மந்தை மந்தையாகவே
மாடு கூடி மேய்ந்திடும்.
சாரை சாரையாகவே
தரையில் எறும்பு ஊர்ந்திடும்.
நேரில் தினமும் பார்க்கிறோம்
நீயும் நானும் தம்பியே..!